ADVERTISEMENT

அமீரகத்தில் மருந்துகள் பற்றிய முழு விவரங்களைப் பெற புதிதாக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் சேவை!! 24/7 சேவையை பெறலாம் என சுகாதார அமைச்சகம் தகவல்…

Published: 19 Oct 2023, 10:12 AM |
Updated: 19 Oct 2023, 10:35 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) புதிய 24/7 WhatsApp சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அமீரகக் குடியிருப்பாளர்கள் இப்போது Whatsapp மூலம் மருந்துகள் பற்றிய தகவல்களைப் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சேவையின் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவுசெய்யப்பட்ட மருந்துகளின் பெயர், அவற்றின் வடிவம், நாட்டில் கிடைக்கும் பேக்கேஜ் அளவு மற்றும் விற்பனை விலை உள்ளிட்ட விரிவான தகவல்களைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

அத்துடன், குடியிருப்பாளர்கள் ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் இந்தச் சேவையை அணுகலாம் என்றும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து 24 மணி நேரமும் தகவல் உடனடியாகக் கிடைக்கும் என்றும் MoHAP தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய டிஜிட்டல் சேவையானது, தற்போது துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் நடைபெற்று வரும் தொழில்நுட்பக் கண்காட்சியான Gitex Global 2023 இல் வெளியிடப்பட்டுள்ளது. இது குடியிருப்பாளர்களிடையே பொது சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், பொருத்தமான மருந்துகள் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்குவதற்கும் மற்றும் மருந்துப் பிழைகளைக் குறைப்பதற்கும் அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேவை மருந்து தயாரிப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம், நோயாளிகள் தங்கள் தேவைகள் மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்படி சுகாதார முடிவுகளை எடுக்க உதவும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சுகாதார சேவைகளுக்காக புதிதாக வெளியிடப்பட்ட இந்த தளம், ஆங்கிலத்தில் கிடைப்பதாகவும், பதிவுசெய்யப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளை வர்த்தகம் அல்லது அறிவியல் பெயர் மூலம் தேடுவதற்கு எளிதாக அணுக உதவும் என்றும் ஆதரவு சேவைகள் துறையின் (Support Services Sector) உதவி துணைச் செயலாளர் அஹ்மத் அலி அல் தஷ்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய போது, இந்த முன்முயற்சி அத்தியாவசிய மருத்துவத் தகவல்களை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவது மட்டுமல்லாமல், நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான துறையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று அல் தஷ்தி கூறியுள்ளார்.

சேவையை எப்படி பெறுவது?

அமீரக குடியிருப்பாளர்கள் வாட்ஸ்அப்பில் 0097142301221 என்ற எண்ணின் மூலம் இந்த சேவையைப் பெறலாம். மேலும் சேவையில் கிடைக்கக்கூடிய விருப்பங்களைப் பார்க்க ‘Hi’ என்ற வார்த்தையை அனுப்பினால் போதும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம், பயனர்கள் சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் ஒரு தனித்துவமான அனுபவத்தைப் பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel