அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு நான்கு மாத கால அவகாசம்..!! ILOE திட்டத்தில் பதிவு செய்ய தவறினால் அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) வெளியிட்ட அறிவிப்பின்படி, நாட்டில் உள்ள தனியார் துறை மற்றும் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கட்டாய வேலையிழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் (ILOE) குழுசேர்வது கட்டாயமாகும்.

மேலும், இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. அத்துடன், அமீரகத்தில் பணிபுரியும் 6.5 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் இதுவரையிலும் இந்த வேலையின்மை காப்பீட்டு அமைப்பில் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சகம் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமீரகத்தில் புதிதாக வேலையில் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த வேலையின்மை காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை அமைச்சகம் நீட்டியுள்ளது. அதன்படி, தனியார் துறை மற்றும் மத்திய அரசாங்கத்தில் புதிதாக பணியமர்த்தப்படும் ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, வேலையின்மை காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவான அக்டோபர் 1க்குப் பிறகு வேலையில் சேர்ந்த புதிய ஊழியர்களுக்கும், அதேபோன்று ஜனவரி 1, 2023 ம் ஆண்டிற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட புதிய ஊழியர்களுக்கும் இந்த சலுகைக் காலம் பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், நான்கு மாத கால அவகாசத்திற்குள் பதிவு செய்யத் தவறினால் 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட தேதிக்கு அப்பால் மூன்று மாதங்களுக்கு மேல் பதிவு செய்த காப்பீட்டு பிரீமியத்தை செலுத்தத் தவறினால் 200 திர்ஹம்ஸ் கூடுதல் அபராதமாக விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MoHREயின் ILOE திட்டத்தில் பதிவு செய்யும் ஊழியர்கள், திடீரென வேலையை இழக்கும் போது அவர்கள் நிதிச் சிக்கலை சமாளிக்க மூன்று மாதங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எனவே, ஊழியர்கள் புதிய வேலை கிடைக்கும் வரை மூன்று மாதங்களுக்கு சம்பளம் போன்று காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.

இருப்பினும், நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாளிகள், வீட்டுப் பணியாளர்கள், தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள், 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்று மீண்டும் பணிபுரியத் தொடங்கிய ஓய்வு பெற்ற முதியவர்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தில் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ILOE திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்:

இந்த ILOE திட்டங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒரு ஊழியர் மூன்று மாதங்கள் வரை இத்திட்டத்தின் நன்மைகளைப் பெறலாம்.

வகை A: அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம் அல்லது அதற்கும் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்கள்

  • செலவு: மாதத்திற்கு VAT வரியுடன் 5 திர்ஹம்
  • நன்மை: அடிப்படை சம்பளத்தில் 60% என்ற அடிப்படையில் மாதம் 10,000 திர்ஹம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

வகை B: அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம்களுக்கு மேல் ஈட்டும் ஊழியர்கள்

  • செலவு: மாதத்திற்கு VATயுடன் 10 திர்ஹம்
  • இழப்பீட்டு பலன்: அடிப்படை சம்பளத்தில் 60 என்ற கணக்கில் மாதம் 20,000 திர்ஹம் வரை இழப்பீடுப் பெறலாம்.

அதேசமயம், வேலை இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு பெறுவதற்கு, காப்பீடு செய்யப்பட்ட நபர் குறைந்தபட்சம் 12 மாதங்கள் தொடர்ந்து இந்த திட்டத்திற்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும் எனபது கட்டாயமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!