ADVERTISEMENT

விரைவில் GCC-யில் வரவிருக்கும் ஒற்றை விசா: ஆறு நாடுகளுக்கு பயணிக்க ஒரு விசாவே போதும்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..

Published: 13 Oct 2023, 7:49 AM |
Updated: 13 Oct 2023, 8:13 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் உட்பட GCC நாடுகளின் அமைச்சர்கள் பலரும் கூடியவிரைவில் ஒருங்கிணைந்த ‘ஒற்றை விசா’ நடைமுறைக்கு வரும் என்று கடந்த சில மாதங்களாக தெரிவித்து வருகின்றனர். அதாவது GCC-க்கு செல்ல வேண்டி ஒரு விசா பெற்றுக்கொண்டால் அந்நபர் வளைகுடா நாடுகளின் அனைத்து நாடுகளுக்கும் செல்லலாம் என்ற வகையில் இந்த விசா நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஒருங்கிணைந்த GCC விசா பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ஷெங்கன் விசா (schenzen visa) என்ற ஒற்றை விசாவானது, பல ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கான அணுகலை வழங்கும். அதே பாணியில், GCC நாடுகளிடையே பயணிப்பதற்கான அனுமதியை வழங்கும் ஒற்றை விசாவை GCC அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒற்றை விசா வைத்திருப்பவர், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமான் மற்றும் குவைத் ஆகிய ஆறு GCC உறுப்பு நாடுகளுக்கும் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தற்பொழுது வரை ஆறு வளைகுடா நாடுகளும் சாலை மற்றும் வான்வழி இணைக்கப்பட்டிருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் தனித்தனியாக விசாக்களை பெற வேண்டியுள்ளது நடைமுறையில் இருந்து வருகிறது.

ADVERTISEMENT

எனவே, இந்த ஒற்றை விசா GCC நாடுகளின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்றும் இதனால், பிராந்திய பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும் என்று கூறப்படுகிறது.

ஒற்றை விசா எப்போது நடைமுறைக்கு வரும்?

சுற்றுலாப்பயணிகளுக்கு பயனளிக்கும் ஒற்றை விசா திட்டமானது, மிகவிரைவில் தொடங்கப்படும் என்று ஓமான் நாட்டின் பாரம்பரிய மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சலீம் பின் முகமது அல் மஹ்ரூகி அவர்கள் தெரிவித்துள்ளதாக ஓமானைச் சேர்ந்த ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

அதே நேரத்தில், எதிர்வரும் நவம்பர் மாதம் மஸ்கட்டில் நடைபெறும் பிராந்திய உள்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் விசா வழங்கப்படும் என்று ஓமான் அப்சர்வர் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும்?

பிராந்திய அமைச்சர்களின் கூற்றுப்படி, ஒற்றை விசா செயல்படுத்தப்பட்டால், GCC நாடுகள் கூட்டு விளம்பரப் பிரச்சாரங்களை மேற்கொள்வதைக் காணலாம். அத்துடன் விசாவிற்கான பொதுவான முன்பதிவு தளம் மற்றும் கூட்டு சுற்றுலா இணையதளம் உருவாக்குவது பற்றியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

GCC நாடுகளில் வசிப்பவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கலாமா?

இப்போது GCC நாடுகளின் குடிமக்கள் மற்ற வளைகுடா நாடுகளுக்கு இடையே விசா இல்லாத பயணத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்த நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்ற வளைகுடா நாடுகளுக்கு இடையே பயணிப்பதற்கு விசா தேவை உள்ளது.

இவ்வாறான சூழலில், GCC நாடுகளில் வசிப்பவர்கள் ஒருங்கிணைந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியுமா அல்லது அது நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் அதற்கு விண்ணப்பிக்க வேண்டுமா என்பது பற்றிய  தெளிவான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

விசா கட்டணம்:

தற்போது வரை, விசாவிற்கான கட்டணம் மற்றும் செல்லுபடியாகும் காலம் போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. மேலும் விவரங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel