அமீரக செய்திகள்

அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கென கோல்டன் பென்ஷன் திட்டம்!! பணிக்காலத்தின் முடிவில் ஓய்வூதியம் பெறுவதற்கு உதவும் வகையில் அறிமுகம்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவரா நீங்கள்? உங்களின் ஓய்வுக் காலத்தில் பென்ஷன் பெறுவதற்கான சேமிப்பை இன்னும் தொடங்காமல் இருக்கிறீர்களா? உங்களுக்காகவே ஷரியா-இணக்க சேமிப்பு மற்றும் முதலீட்டு நிறுவனமான நேஷனல் பாண்ட்ஸ், வரவிருக்கும் அக்டோபர் 11 அன்று கோல்டன் பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த புதிய திட்டமானது அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதிவு செய்வதற்கான விருப்பத்தை வழங்கும் மற்றும் அவர்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும் முன்னர் சேமிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோல்டன் பென்ஷன் திட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் பின்வருமாறு பார்க்கலாம்.

கோல்டன் பென்ஷன் திட்டம்:

நேஷனல் பாண்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டம் பொது மற்றும் தனியார் துறையில் உள்ள அனைத்து அமீரக நிறுவனங்களுக்கும் கிடைக்கும். இருப்பினும், இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் அமீரகத்தில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் ஆவர். அவர்கள் இத்திட்டத்தின் மூலம் வேலையில் இருந்து ஓய்வு பெறும் சமயத்தில் நிலையான நிதி வருவாயைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த பென்ஷன் திட்டத்தில் பணியாளர்களைச் சேர்க்க விரும்பும் நிறுவனங்கள் நேஷனல் பாண்ட்ஸில் பதிவு செய்து, ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் எத்தனை பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர் மற்றும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் தொகையை தீர்மானிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறு உங்கள் நிறுவனம் உங்களை இந்தத் திட்டத்தில் பதிவு செய்கிறது என்றால், நீங்கள் மாதத்திற்கு 100 திர்ஹம்கள் வரை செலுத்துவதற்கான விருப்பம் உங்களுக்கு உள்ளது. மேலும், இந்தத் திட்டத்தில் பதிவு செய்ததற்கான ஆதாரமாக சுக்குக்ஸ் என்ற ஷரியா-இணக்க சேமிப்பு பத்திரம் , நேஷனல் பாண்ட்ஸ் நிறுவனத்துடனான ஊழியர்களின் கணக்குகளின் கீழ் வழங்கப்படும்.

ஓய்வூதியத்தின் சேமிப்பை, எனக்குத் தேவைப்படும்போது எடுக்க முடியுமா?

உங்களுக்கு வழங்கப்பட்ட சுக்குக் பத்திரத்தின் படி, உங்களது நிறுவனத்தின் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே அவ்வாறு சேமிப்பை மீட்டெடுக்க முடியுமே தவிர, உங்களால் மீட்க முடியாது என்பதை நேஷனல் பாண்ட்ஸ் தெளிவு படுத்தியுள்ளது.

எனவே, உங்கள் நிறுவனம் அதைக் கோராத வரை, நீங்கள் ஓய்வூதிய சேமிப்பை அணுக முடியாது. இருப்பினும், உங்கள் முடிவில் இருந்து இந்த திட்டத்தில் கூடுதல் சேமிப்பை நீங்கள் பங்களித்து வருகிறீர்கள் என்றால், உங்களுக்குத் தேவைப்படும்போது அந்தத் தொகையை நீங்கள் அணுகலாம்.

கோல்டன் பென்ஷன் திட்டத்திற்கும் கிராஜுட்டி தொகைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

அமீரக தொழிலாளர் சட்டம் – ஃபெடரல் ஆணை-சட்டம் எண். 33 இன் 2021-இன்படி, தனியார் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தின் முடிவில் கிராஜுட்டி (gratuity) தொகையைப் பெறலாம். அதே நேரத்தில் கோல்டன் பென்ஷன் திட்டம் என்பது கிராஜுட்டியுடன் கூடுதலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முதலாளிகள் பதிவு செய்யக்கூடிய ஒரு விருப்பத் திட்டமாகும்.

நேஷனல் பாண்ட்ஸ் குழுமத்தின் CEO முகமது காசிம் அல் அலி அவர்கள் பென்ஷன் திட்டம் பற்றி பேசுகையில், கோல்டன் ஓய்வூதியத் திட்டம் கிராஜுவிட்டிக்கு மாற்றாக இல்லை என்று கூறியுள்ளார். மாறாக, இந்தத் திட்டம், நிறுவனங்கள் வழங்கும் கிராஜுவிட்டியை மேம்படுத்துவதாகக் குறிப்பிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp channel

Related Articles

Back to top button
error: Content is protected !!