ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இன்று (அக்டோபர் 21) மேகமூட்டமான வானிலையை அனுபவித்த அதேவேளையில், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான கனமழை பதிவாகியுள்ளது.
ஏற்கனவே, தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இப்போது ஃபுஜைரா எமிரேட்டின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
ஒரு சில எமிரேட்களில் மோசமான வானிலை நிலவி வருவதால் குறிப்பாக, ஃபுஜைரா, அல் அய்ன் மற்றும் ராஸ் அல் கைமாவில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கோர் ஃபக்கனின் ஒரு பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, குடியிருப்பாளர்கள் வெளியில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஃபுஜைராவில் உள்ள வாதி மைதாத் / முர்பாத் பகுதிகளை பிற்பகல் 3.30 மணியளவில், மிதமான மழை பெய்ததாக NCM கூறியுள்ளது. குறிப்பாக, ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமாவின் எல்லையில் உள்ள நகரமான மசாஃபியில் சாலையில் ஆலங்கட்டிக் கற்கள் கிடப்பதை குடியிருப்பாளர்கள் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர்.
இதற்கிடையில், அரேபிய கடலில் உருவாகி வரும் புயலையும் NCM கண்காணித்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பமண்டல சூறாவளியாக மாறக்கூடும் என்றும் கூறியுள்ளது.
இந்த வானிலை அமீரகத்திற்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், கடலில் இருந்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை நோக்கி வரும் ஈரப்பதம், மழையுடன் கூடிய சில மேகங்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று வானியல் மையம் தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel