அமீரக செய்திகள்

அமீரகத்தில் உடனடி பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐடி சேவைகளை வழங்க 24/7 கியோஸ்க்கள்..!! விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து சேவைகளிலும் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்பொழுது புதிய கியோஸ்க்குகள் அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்த கியோஸ்க்குகளை பயன்படுத்தி, தங்கள் பயோமெட்ரிக்ஸைச் சமர்ப்பிப்பதற்கும், பாஸ்போர்ட்களை புதுப்பிப்பதற்கும் மற்றும் எமிரேட்ஸ் ஐடி போன்ற ஆவணங்களை 24×7 நேரமும் செயலாக்குவதற்கும் அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) இதற்கான மாதிரி திட்டம் ஒன்றில் வேலை செய்து வருகிறது. மேலும் இது 2023 அல்லது 2024 இல் சோதனைகளை வெற்றிகரமாக முடித்தவுடன் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு ICPயின் இத்திட்டம் வெற்றியடைந்ததும், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற முக்கிய இடங்களில் இந்த கியோஸ்க்குகள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அமீரக நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் எதிர்காலத்தில் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடிகளை உடனடியாக புதுப்பிக்க இந்த கியோஸ்க்குகளை அணுகினாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, துபாய் வேர்ல்ட் ட்ரேட் சென்டரில் நடைபெற்று வரும் Gitex Global தொழில்நுட்பக் கண்காட்சியில் ஃபெடரல் அமைப்பு ஒரு கியோஸ்க்கை மட்டும் பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைத்துள்ளது. Gitex ஆனது 6,000 க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் தங்கள் சமீபத்திய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சங்கமிக்கும் நிகழ்வாகும்.

கியோஸ்க் சிறப்பம்சம்:

முதல் கட்டத்தில், அமீரகவாசிகள் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் கியோஸ்க்குகள் மூலம் மட்டுமே தங்கள் பயோமெட்ரிக்ஸைச் சமர்ப்பிக்க முடியும், இது ICP சேவை மையங்களில் பயோமெட்ரிக்ஸைச் சமர்ப்பிப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட்களைப் பெறுவதற்கான தேவையை நீக்குகிறது, ஏனெனில் இந்த சேவைகள் 24/7 இல் கிடைக்கும்.

இந்த கியோஸ்க்குகளின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இவற்றில் பிரிண்டரும் இணைக்கப்பட்டிருக்கும், எனவே, அமீரகவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடிகள் மற்றும் விசாக்களை அந்த இடத்திலேயே அச்சிட்டுப் பெறலாம்.

அதேபோல், வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் சிம் கார்டுகளைப் பெற தங்கள் பயோமெட்ரிக்ஸைச் சமர்ப்பிக்க கியோஸ்க்களைப் பயன்படுத்தலாம். இந்த மெஷின்களால் கைரேகைகள் மற்றும் கையொப்பங்களை ஸ்கேன் செய்து பதிவு செய்யவும், புகைப்படங்களை எடுக்கவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!