ADVERTISEMENT

இனி பணம் செலுத்த வெறும் மொபைல் எண் இருந்தால் போதும்..!! அமீரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆன்லைன் தளம்..!!

Published: 2 Nov 2023, 8:58 PM |
Updated: 2 Nov 2023, 9:12 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்போது மொபைல் எண்களைப் பயன்படுத்தி வெறும் 10 வினாடிகளில் ஆன்லைனில் பணத்தை அனுப்பலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பேமண்ட் முறைக்கு வங்கி கணக்கு எண் அல்லது IBAN (சர்வதேச வங்கி கணக்கு) எண் போன்ற வங்கி விவரங்கள் எதுவுமே தேவையில்லை என்பது முக்கியமான விஷயமாகும். இது குறித்த விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

ADVERTISEMENT

அமீரகத்தில் ‘Aani’ என்ற புதிய ஆன்லைன் தளம் மூலம் இந்த பணப்பரிமாற்றம் செய்யும் வசதி கடந்த அக்டோபர் 16ஆம் தேதியன்று அமீரக மத்திய வங்கியின் (CBUAE) துணை நிறுவனமான Al Etihad Payments (AEP) ஆல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு இன்ஸ்டன்ட் பேமண்ட் முறையை மேற்கொள்ள அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

‘Aani’ தளத்தின் நன்மைகள்:

  • ஒருவரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் அவருக்குப் பணத்தை அனுப்புதல்.
  • பணத்தை கோருதல்.
  • பில்களுக்கு கட்டணம் செலுத்துதல்.
  • கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணத்தை செலுத்துதல். வெகுவிரைவில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் என்று CBUAE அறிவித்துள்ளது.
  • இதில் நிலுவையில் உள்ள கட்டணக் கோரிக்கைகள் அல்லது அவற்றை நிராகரித்தல் அல்லது ஏற்றுக்கொள்வது போன்ற கட்டண கோரிக்கைகளை நிர்வகிக்கும் விருப்பம் உள்ளது.
  • இந்த தளத்தின் மூலம் செய்யப்படும் ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வரம்பு 50,000 திர்ஹம் என்று கூறப்பட்டுள்ளது.

எப்படி செயல்படுகிறது?

இந்த உடனடி பணப் பரிமாற்ற முறையானது பங்கேற்கும் வங்கிகளின் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் மட்டுமே அணுக முடியும். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்குக் கிடைக்கும் Aani மொபைல் ஆப்-ஐ  பதிவிறக்கம் செய்வதன் மூலம், இன்ஸ்டன்ட் பேமண்ட் முறையை மேற்கொள்ளலாம்.

ADVERTISEMENT

Aani தளத்துடன் எட்டு அமீரக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூட்டு சேர்ந்துள்ளன. எனவே, குடியிருப்பாளர்கள் உரிமம் பெற்ற எட்டு நிதி நிறுவனங்களில் ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

உரிமம் பெற்ற எட்டு நிதி நிறுவனங்கள்:

  1. அபுதாபி கமெர்ஷியல் வங்கி
  2. அல் ஃபர்தான் எக்ஸ்சேஞ்ச்
  3. எமிரேட்ஸ் NBD
  4. ஃபைனான்ஸ் ஹவுஸ்
  5. ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி
  6. ஹபீப் வங்கி AG சூரிச்
  7. மஷ்ரெக் வங்கி
  8. ஃபுஜைரா தேசிய வங்கி

Al Etihad Payments எதிர்வரும் 2024 இன் இறுதிக்குள் அனைத்து உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களை ‘Aani’ தளத்துடன் இணைக்க திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

Aani வழியாக பணத்தை அனுப்புவது எப்படி?

படி1: உங்கள் வங்கியின் மொபைல் ஆப் மூலம் Aani அமைப்புக்கு பதிவு செய்யுங்கள்:

  • புதிய தளத்துடன் கூட்டு சேர்ந்துள்ள வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு இருந்தால், நீங்கள் Aaniயில் பதிவு செய்யலாம். ஒவ்வொரு வங்கியிலும் பதிவு செய்வதற்கான செயல்முறை வேறுபடலாம், நீங்கள் வங்கியின் ஸ்மார்ட் செயலியைப்  பதிவிறக்கி, Aani உடன் இணைக்க விரும்பும் கணக்கை (சேமிப்பு அல்லது நடப்பு) தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அது முடிந்ததும், உங்களின் எமிரேட்ஸ் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற உங்களின் தனிப்பட்ட விவரங்களை உறுதிசெய்து, உங்கள் பாதுகாப்பு பின் எண் அல்லது ஆன்லைன் பேங்கிங் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

படி 2: உறுதிப்படுத்தலைப் பெறவும்

  • மேற்கூறிய செயல்முறையை வெற்றிகரமாக முடித்தவுடன், நீங்கள் Aani பிளாட்ஃபார்மில் வெற்றிகரமாகப் பதிவுசெய்துள்ளீர்கள் என்று மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.
  • இப்போது, நீங்கள் Aani வழியாக பணப்பரிவர்த்தனையை தொடங்கலாம்.

அதற்கு உங்கள் வங்கியின் ஸ்மார்ட் செயலியில் உள்ள ‘Transfers’ என்ற பிரிவுக்குச் செல்லவும், அதில் Aani தொடர்பான பல்வேறு சேவைகள் தோன்றும். Al Etihad Payments படி, பணத்தை மாற்றுவதற்கான செயலாக்க கட்டணம் தனிப்பட்ட நிதி நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel