அமீரக செய்திகள்

நவ.6 முதல் துபாய் ஏர்போர்ட் வழியாக செல்லும் பயணிகளின் பாஸ்போர்ட்டில் ஸ்பெஷல் ஸ்டாம்ப்.. துபாய் ஏர்ஷோவை முன்னிட்டு சிறப்பு நடவடிக்கை..!!

துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் விமானக் கண்காட்சியான துபாய் ஏர்ஷோ, இந்தாண்டு நவம்பர் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் (DWC) உள்ள துபாய் ஏர்ஷோ தளத்தில் நடைபெற உள்ளது.

ஆகவே, எதிர்வரும் நவம்பர் 6 முதல் 18 வரை துபாய் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் பாஸ்போர்ட்டில் “துபாய் ஏர்ஷோ-தி ஃப்யூச்சர் ஆஃப் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி” முத்திரை பதிக்கப்படும் என்று முத்திரையின் படத்துடன் துபாய் ஏர்போர்ட்ஸ் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் அறிவித்துள்ளது.

மேலும், இந்த கால இடைவெளியில் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) அல்லது துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) வழியாக பறந்தாலும், அனைத்து பயணிகளும் பாஸ்போர்ட்டில் முத்திரையைப் பெறுவார்கள் என்றும் துபாய் ஏர்போர்ட்ஸ் குழுமத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாய்-GDRFA மற்றும் துபாய் ஏர்போர்ட்ஸ் கூட்டாண்மையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பாஸ்போர்ட் ஸ்டாம்பிங் முயற்சியானது துபாயை ஒரு சிறந்த சர்வதேச இடமாக மேம்படுத்துவதற்கும், நிகழ்வின் போது துபாய்க்கு வருகை தரும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதற்குமான நகரத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் என்றும் GDRFAயின் பொது இயக்குநரான லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மரி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான விமான நிகழ்ச்சிகளில் ஒன்றான துபாய் ஏர்ஷோ, இந்தாண்டு அதன் 18வது பதிப்பில் அடியெடுத்து வைக்கும் நிலையில், சுமார் 95 நாடுகளில் இருந்து 1,400 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மெகா நிகழ்வில், 180 க்கும் மேற்பட்ட மேம்பட்ட வணிக, தனியார் மற்றும் இராணுவ விமானங்கள் காட்சிக்கு வைக்கப்படும், அதே நேரத்தில் 20 நாடுகளின் பெவிலியன்கள் அவற்றின் மிகவும் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், துபாய் ஏர்ஷோவில் பங்கேற்பவர்கள் தங்கள் விமானத் திறன்களை உலகளாவிய விண்வெளித் துறைக்கு வெளிப்படுத்தும் வகையில் வான்வழி சாகசக் காட்சியை நிகழ்த்திக் காட்டுவார்கள். சுமார் 300 க்கும் மேற்பட்ட சர்வதேச பேச்சாளர்களை வரவேற்கும் ஒரு விரிவான மாநாட்டு நிகழ்ச்சி நிரலும் துபாய் ஏர்ஷோ 2023இல் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!