ADVERTISEMENT

வாகன ஓட்டிகளுக்கு ‘child car seat’-ஐ இலவசமாக வழங்கும் துபாய் போலீஸ்..!! குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரச்சாரம்..!!

Published: 7 Nov 2023, 9:09 PM |
Updated: 7 Nov 2023, 9:21 PM |
Posted By: Menaka

துபாய் காவல்துறை குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, ‘Child Seat… Safety and Serenity’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கார்களில் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான இருக்கைகளை (baby seat) இலவசமாக விநியோகிக்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், போக்குவரத்து தொடர்பான காயங்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க, வாகனங்களில் குழந்தை இருக்கைகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைகளைப் பாதுகாப்பது ஆகும்.

துபாயில் கடந்த பத்து மாதங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் இந்த இருக்கைகள் பயன்படுத்தாமல் சுமார் 47 விபத்துக்களைப் பதிவு செய்துள்ளதாகவும், இதில் இரண்டு குழந்தைகள் பலியாகியதாகவும் துபாய் காவல்துறையின் பொதுப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இந்த விபத்துகளில் 25 சிறிய காயங்கள் உட்பட 19 நடுத்தர காயம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, கார்களில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின் இருக்கைகளில் குழந்தை இருக்கைகளை வழங்குவதை உறுதி செய்யுமாறு பெற்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேசமயம், துபாய் காவல்துறை வாகனத்தில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய இருக்கைகளை முறையாகப் பயன்படுத்துவது, குழந்தையின் வயதுக்கு ஏற்றவாறு இருக்கையைத் தேர்ந்தெடுப்பது மற்றும் இருக்கையை நிறுவுவதற்கான சரியான வழி குறித்து அமீரகவாசிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று அல் மஸ்ரூய் தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசுகையில், வாகனம் ஓட்டும் போது குழந்தையை முன் இருக்கையில் விட்டுச் செல்வது அல்லது பிடித்து வைத்திருப்பது குழந்தையின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான மற்றும் சட்டவிரோதமான நடைமுறையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தெளிவாகச் சொன்னால், 10 வயதுக்குட்பட்ட அல்லது 145 செ.மீ.க்கும் குறைவான குழந்தைகளை முன் இருக்கையில் அமர அனுமதிப்பது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானதாகும்.

வாகனத்தை திடீரென நிறுத்தும் போதும் அல்லது போக்குவரத்து விபத்து ஏற்படும் போதும் குழந்தை முன்னோக்கி தூக்கி எறியப்பட்டு வாகனத்தின் உள் பகுதிகளுடன் மோதலாம் அல்லது வாகனம் கவிழ்ந்தால் வெளியேற்றப்படலாம். எனவே, குழந்தையை முன் இருக்கையில் அமர்த்தினால் 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel