அமீரக செய்திகள்

அமீரகத்தில் யூனியன் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து அபராதத்தில் தள்ளுபடியை அறிவித்துள்ள இரண்டு எமிரேட்டுகள்..!!

ஐக்கிய அரபு அமீரகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அதன் 52 வது தேசிய தினத்தைக் கொண்டாட உள்ளது. இந்நிலையில் ராஸ் அல் கைமாவில் உள்ள பொது சேவைத் துறை (Public Service Department) யூனியன் தினத்தைக் கொண்டாடும் விதமாக, டிசம்பர் மாதம் முழுவதும் பொது அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து எமிரேட்டின் பொதுச் சேவைத் துறையின் இயக்குநர் ஜெனரல் பொறியாளர் காலித் ஃபட்ல் அல் அலி அவர்கள் பேசுகையில், நாட்டின் யூனியன் தினக் கொண்டாட்டங்களின் போது சமூக உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியைப் பரப்பவும், பொது விதிமீறல்களுடன் தொடர்புடைய அபராதங்களை செலுத்துவதற்கு தனிநபர்களை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அபராதங்களில் இத்தகைய தள்ளுபடியை வழங்குவதன் மூலம், துறை வளர்ச்சியை ஆதரிப்பது, விதிமுறைகளுக்கு இணங்குவதை எளிதாக்குவது மற்றும் தனிநபர்களின் நலன்களுக்கு இடையூறுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், உம் அல் குவைன் எமிரேட்டிலும் நவம்பர் 1, 2023 க்கு முன்னர் விதிக்கப்பட்ட அனைத்து வகையான மீறல்களுக்கும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடுமையான விதிமீறல்களைத் தவிர்த்து, அனைத்து மீறல்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும், மேலும் இது டிசம்பர் 1, 2023 முதல் ஜனவரி 7, 2024 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, சில மீறல்களுக்கு இந்த தள்ளுபடி கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது. அவை:

  1. தன்னுடைய உயிருக்கோ அல்லது மற்றவர்களின் உயிருக்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டுதல்.
  2. பொது அல்லது தனியார் பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டுதல்.
  3. கனரக வாகனங்கள் சிவப்பு விளக்கை முந்திச் செல்லுதல்.
  4. இலகுரக வாகனங்கள் சிவப்பு விளக்கை தாண்டிச் செல்லுதல்.
  5. மோட்டார் சைக்கிள்களால் சிவப்பு விளக்கை முந்திச் செல்லுதல்.
  6. அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 80 கிமீக்கு மேல் தாண்டுவது.
  7. உரிமம் இல்லாமல் வாகன எஞ்சின் அல்லது அடிப்படை சேஸ்ஸில் (chassis) மாற்றங்களைச் செய்தல்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!