அமீரக செய்திகள்

அமீரகத்தின் ‘ஃபேமிலி குரூப் விசிட் விசா’ பற்றிய கூடுதல் விபரங்கள் அனைத்தும் இங்கே..!!

சமீப காலங்களில் அதிகளவு மக்களால் விரும்பி செல்லக்கூடிய இடங்களில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கின்றது. இங்கு பல்வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதால் அவர்களின் குடும்பத்தினரும் அமீரகத்தை சுற்றிப்பார்க்க விரும்பும் சுற்றுலாவாசிகளும் தொடர்ந்து படையெடுத்துக்கொண்டு வருகின்றனர்.

அமீரக அரசும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு உத்திகளையும் கையாண்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது, அமீரக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஃபேமிலி குரூப் விசிட் விசா (family group visit visa) குடும்பமாக அமீரகம் பயணிக்கவிரும்பும் நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் செல்லும் போது விசா கட்டணம் கிடையாது, இலவசமாக விசாவைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் விண்ணப்பிக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், குழந்தைகளின் இலவச விசாவுக்கான விண்ணப்பம் தந்தை அல்லது தாயின் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த வகை விசாவனது, குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து 30 அல்லது 60 நாட்களுக்கு அமீரகத்தில் தங்கி நாட்டை ஆராய அனுமதிக்கிறது. மேலும், இந்த விசாவை நீங்கள் நாட்டிற்குள் இருந்தவாறே 120 நாட்களுக்கு நீட்டிக்க முடியும் என்பது குறிப்படத்தக்கது.

இருப்பினும் இந்த விசா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாவாசிகளுக்கு ஒரு பிரபலமான விருப்பமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பயனுள்ள விசாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் மற்றும் கட்டணம் போன்ற விவரங்களை இங்கே விரிவாக பின்வருமாறு பார்க்கலாம்:

விண்ணப்பிப்பது எப்படி?

  • இந்த விசாவிற்கு அமீரகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அங்கீகரிக்கப்பட்ட பயண ஏஜென்சிகள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • எனவே, ஒரு குடும்பம் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் புகைப்படங்களின் நகல்களை ஒரே நேரத்தில் ஒரு பயண நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இதில் குழந்தைகளுக்கு விசா கட்டணம் இலவசம் என்றாலும், டிராவல் ஏஜெண்டு சர்வீஸ் கட்டணம் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் பொருந்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
  • உங்கள் விண்ணப்பத்தை நிறுவனம் செயலாக்கும்.
  • பின்னர் ஓரிரு நாட்களில் உங்கள் விசா வழங்கப்படும்.

செலவு:

  • பெற்றோருக்கான விசா கட்டணம், குழந்தைகளுக்கான சேவைக் கட்டணத்துடன், பயண நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடலாம்.
  • பெற்றோருக்கு 30 நாள் விசா 350 திர்ஹம் முதல் 500 திர்ஹம் வரை இருக்கும்.
  • ஒரு குழந்தைக்கு சேவை கட்டணம் மற்றும் காப்பீடு 80 திர்ஹம் மற்றும் 120 திர்ஹம் வரை வசூலிக்கப்படும்.
  • பெரியவர்களுக்கு 60 நாள் விசாவிற்கு 500 திர்ஹம் முதல் 650 திர்ஹம் வரை செலவாகும், காப்பீடு உட்பட சேவைக் கட்டணம் 130 திர்ஹம் முதல் 170 திர்ஹம் வரை மாறுபடும்.

தேவையான ஆவணங்கள்:

  • குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

விசா நீட்டிப்பு:

நீங்கள் நாட்டிற்குள் தங்கியவாறே உங்கள் குடும்ப விசாவை நீட்டிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், விசா நீட்டிப்புக்கு குழந்தைகளுக்கு முழு விசா கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், பார்வையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் குடும்ப விசாவை 120 நாட்கள் வரை நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!