அமீரக செய்திகள்

நவம்பர் 3ம் தேதியை ‘UAE Flag Day’ஆக கொண்டாடும் அமீரகம்.. 5 முக்கிய அம்சங்கள் இதோ..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 3 ஆம் தேதி ‘UAE Flag Day’ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றும் அமீரகமெங்கும் உள்ள கட்டிடங்கள் மட்டும் அலுவலகங்களில் அமீரகத் தேசிய கொடிகளை பறக்க விட்டு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சிறப்பாக கொடி தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் அமீரக கொடி தினமானது, முதன்முதலில் 2013ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் அறிவிக்கப்பட்டு, இந்த நாளில் அரசு கட்டிடங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் அமீரக கொடியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அன்றிலிருந்து இன்று வரை அமீரக மக்கள் ஆண்டுதோறும் அமீரக கொடி தினத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த கொடி தினம் 2004 ஆம் ஆண்டு அமீரகத்தின் முன்னாள் தலைவர் மறைந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க அமீரகக் கொடியின் உருவாக்கம், வடிவமைப்பு, மற்றும் நிறங்களுக்குப் பின்னால் உள்ள அடையாளங்கள், அதன் வரலாற்று முக்கியத்துவம் என்ன என்பது பற்றிய சுவராஸ்யமான தகவல்களைப் பின்வருமாறு பார்க்கலாம்:

1. ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடியானது 1971 ஆம் ஆண்டில், அப்துல்லா முகமது அல் மாய்னா என்ற இளம் எமிராட்டியரால் வடிவமைக்கப்பட்டது.

2. செவ்வக வடிவிலான கொடியில் உள்ள நிறங்கள் ஒவ்வொன்றும் ஆழமான குறியீட்டைக் குறிக்கின்றன. இதில் சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் கறுப்பு என நான்கு வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன.

  • சிவப்பு: இந்த நிறம் நாட்டின் வீரம், கடினத்தன்மை மற்றும் வலிமையைக் குறிப்பதுடன் கடந்த தலைமுறையினரின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துகிறது.
  • பச்சை: இது நாட்டின் கலாச்சார மறுமலர்ச்சி, செழுமை, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கிறது.
  • வெள்ளை: உலக அமைதியை வலியுறுத்தும் இந்த நிறம், நேர்மை, தூய்மை மற்றும் நாட்டின் தொண்டு முயற்சிகளையும் அடையாலப்படுத்துகிறது.
  • கறுப்பு: இது தீவிரவாதத்திற்கு எதிராக இருப்பதையும், எதிரிகளின் பின்னடைவையும் குறிக்கிறது.

3. இந்த தேசிய கொடியை முதன்முதலில் அமீரகத்தின் தந்தையான மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் டிசம்பர் 2, 1971 அன்று கொடிக்கம்பத்தில் ஏற்றியுள்ளார்.

4. அமீரகக் கொடியானது கடுமையான வானிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில், ஒரு சதுர மீட்டருக்கு குறைந்தபட்சம் 122.5 கிராம் எடையுள்ள நைலானில் இருந்து வடிவமைக்கப்படும்.

5. ஐக்கிய அரபு அமீரக மக்களின் தேசிய கௌரவமாகவும் நாட்டின் அடையாளமாகவும் உள்ள அமீரகக் கொடியை பயன்படுத்துவதற்கென வழிகாட்டி உள்ளது. அவற்றை மீறி கொடியை அவமதிப்பது அல்லது தவறாகப் பயன்படுத்துவது போன்ற நடத்தைகளில் ஈடுபட்டால் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது 500,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!