ADVERTISEMENT

UAE: தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் விடுமுறை.. சிறப்பு கொண்டாட்டங்கள் ரத்து.. இந்திய பள்ளிகள் அறிவிப்பு..!!

Published: 8 Nov 2023, 2:40 PM |
Updated: 8 Nov 2023, 2:44 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு 4 நாள் வார இறுதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வருவதால், பள்ளிகளில் வழக்கமாக நடைபெறும் தீபாவளி கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று பள்ளி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீபாவளியை முன்னிட்டு துபாயில் உள்ள Gems Our Own Indian School விடுமுறை தொடர்பாக பெற்றோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், நவம்பர் 10 வெள்ளிக்கிழமை மற்றும் நவம்பர் 13 திங்கட்கிழமைகளில் பள்ளி மூடப்படும் என்றும், எனவே சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையுடன் மாணவர்கள் நான்கு நாள் விடுமுறையை அனுபவிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பள்ளியின் முதல்வர் லலிதா சுரேஷ் அவர்கள் பேசுகையில், இந்த ஆண்டு பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் இருக்காது என்றும் மற்றும் அனைத்து மாணவர்களும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட்டின் (ERC) பிரச்சாரத்திற்கு நன்கொடை அளிப்பதன் மூலம் தீபாவளியைக் கொண்டாட ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தற்போது, காஸாவில் போரினால் பாதிக்கப்பட்டு வரும் பாலஸ்தீனியர்களுக்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் தொடங்கிய ‘தாராஹூம் – காசா’ நிவாரணப் பிரச்சாரத்தை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். ஏற்கனவே, ஆயிரக்கணக்கான அமீரகக் குடியிருப்பாளர்கள் நிவாரணம் வழங்கியுள்ள இந்த பிரச்சாரத்தின் மூலம் காசாவிற்கு டன் கணக்கில் உயிர்காக்கும் நிவாரணப் பொருட்களை அனுப்ப எமிரேட்ஸ் ரெட் கிரசெனட் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அபுதாபியில் உள்ள ஷைனிங் ஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளியும் இந்த ஆண்டு அனைத்து முக்கிய கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளது. இந்தப் பள்ளியின் முதல்வர் கூறுகையில், காஸா பேரழிவினை ஒட்டுமொத்த உலகமும் கவனித்து வருகின்ற நிலையில், எங்கள் பள்ளியின் அனைத்து தீபாவளி கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அனைத்து வகையான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியாக இருப்பதை குற்ற உணர்ச்சியாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மனிதாபிமான நெருக்கடி விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று முழு பிராந்தியத்தின் அமைதிக்காக நாங்கள் கூட்டாக பிரார்த்தனை செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஷார்ஜா இந்தியன் பள்ளி தீபாவளிக்கு விடுமுறை அளித்துள்ளது, ஆனால் அனைத்து பண்டிகைகளையும் ரத்து செய்துள்ளது. இது குறித்து அப்பள்ளியின் முதல்வர் இந்த ஆண்டு நாங்கள் இனிப்புகள் எதுவும் வழங்கவில்லை. உண்மையில், மாணவர்கள் கவுன்சில் பதற்றமான போர் சூழல் குறித்து மிகவும் கவனத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டில் உள்ள பள்ளிகள், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உணவு, போர்வைகள், கூடாரங்கள், சோப்பு பார்கள், பற்பசைகள், பெண்கள் சுகாதாரம், டயப்பர்கள் மற்றும் ஈரமான துடைப்பான்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்குவதற்காக பெற்றோர் மற்றும் மாணவர்களுக்காக சேகரிப்பு பெட்டிகளை அமைத்துள்ளது.

தீபாவளி மட்டுமின்றி, கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் மற்றும் விருந்துகள், குளிர்கால அதிசயங்கள் மற்றும் பண்டிகை விழாக்கள் போன்றவையும் நிறுத்தப்படும் என்றும் பள்ளிகளின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் பலரும் ஆரம்பத்தில் ஏமாற்றம் அடைந்ததாகவும், பின்னர் காரணத்தைப் புரிந்துகொண்ட பிறகு, பள்ளியின் முடிவை முழுமையாக ஏற்றுக் கொண்டதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel