ADVERTISEMENT

அமீரகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு முதலாளியிடம் பணிபுரிய நடைமுறைகள் என்ன..??

Published: 4 Nov 2023, 4:46 PM |
Updated: 4 Nov 2023, 4:56 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுநேர வேலையில் பணிபுரியும் ஊழியர், பகுதி நேர வேலை பார்க்க விரும்பினால் அதற்கு அமீரக தொழிலாளர் சட்டத்தில் அனுமதியுண்டு. இதனடிப்படையில் சில குறிப்பிட்ட நிபந்தனைகளை பின்பற்றி ஒரு தொழிலாளி ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பணிபுரியலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்பினால், அமீரக தொழிலாளர் சட்டத்தில், ஒரே நேரத்தில் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய என்னென்ன விதிகள் உள்ளன என்பது பற்றி தெரிந்து கொள்வது சிறந்ததாகும்.

ADVERTISEMENT

பகுதி நேர வேலை ஒப்பந்தம்:

அமீரக தொழிலாளர் சட்டம் 2010 ஆம் ஆண்டு முதல், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழுநேர வேலையுடன் ஒரு பணியாளரை பகுதி நேர வேலை செய்ய அனுமதிக்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன் படி, ஒரு ஊழியர் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்திடம் (MOHRE) பணி அனுமதி பெற்ற பிறகு, பகுதி நேரமாக வேலை செய்யலாம்.

MOHRE  நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விதியின் படி, அமீரக நிறுவனங்கள் நாட்டிற்குள்ளேயோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ பகுதி நேர ஒப்பந்த முறையின் கீழ் திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதி உண்டு.

ADVERTISEMENT

இருப்பினும் இந்த ஒப்பந்தங்களானது, பல்கலைக் கழகப் பட்டங்கள் அல்லது அதற்கு மேல் உள்ள கல்வி பயின்றவர்கள் மற்றும் ஏதேனும் தொழில்நுட்ப அல்லது அறிவியல் துறையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்த திறமையான ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆகவே, இந்த புதிய விதிமுறையின் கீழ், ஊழியர் ஒருவர் அசல் அல்லது பிற இரண்டாம் நிலை முதலாளிகளின் ஒப்புதல் இல்லாமல் பல பகுதி நேர வேலைகளில் பணிபுரியலாம். இருப்பினும், அவர்கள் MOHRE இலிருந்து பகுதி நேர வேலை அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.

ADVERTISEMENT

அவ்வாறு ஒரு வெளிநாட்டவர் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்து பிடிபட்டால், பணியமர்த்தும் நிறுவனத்திற்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அதேசமயம், ஊழியர் எந்த வகையான விசாவில் நாட்டில் தங்கியிருக்கிறார் என்பதைப் பொறுத்து, பணியாளரிடமிருந்து தேவைப்படும் ஆவணங்கள் சற்று மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அனுமதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அமீரகத்தில் பகுதி நேர வேலைக்கான அனுமதி ஊழியரின் இரண்டாம் நிலை முதலாளியால் விண்ணப்பிக்கப்பட வேண்டும். எனவே, ஊழியர் பாஸ்போர்ட் மற்றும் விசா நகலை உள்ளடக்கிய தேவையான ஆவணங்களை முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊழியர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, 6 மாதங்களுக்கும் மேலாக செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் மற்றும் சரியான ரெசிடென்ஸியை வைத்திருந்தால் பகுதி நேர வேலை அனுமதி அனைத்து நாட்டினருக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பகுதி நேர பணி அனுமதிக்கான கட்டணத்தில் விண்ணப்பக் கட்டணம் 100 மற்றும் ஒப்புதல் கட்டணமாக 500 திர்ஹம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel