அமீரக செய்திகள்

அபுதாபியில் வரவிருக்கும் புதிய ரயில் சேவைகள்.. எதிஹாட் ரயிலுடன் கையெழுத்தான ஒப்பந்தம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் குடியிருப்பாளர்களின் வசதிக்காக புதிய ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில் சேவையானது அபுதாபி சிட்டிக்கும், அபுதாபியின் மேற்கு எல்லை பகுதியான அல் தஃப்ராவில் உள்ள அல் தனா சிட்டிக்கும் (Al Dhannah city) இடையே இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமீரகத்தின் நேஷனல் ரெயில் நெட்வொர்க்கின் டெவலப்பர் மற்றும் ஆபரேட்டரான எதிஹாட் ரயில் (Etihad Rail) மற்றும் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (Adnoc) இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அபுதாபிக்கு மேற்கே 250 கிமீ தொலைவில் அமைந்துள்ள அல் தனா சிட்டியானது, அட்னாக்கில் பணிபுரியும் ஊழியர்களின் தங்குமிடமாகும். 1970 களில் Adnocஇன் தொழில்துறை ஊழியர்கள் வசிக்கும் இடமாக அடையாளம் காணப்பட்ட இந்த இடத்தில் தற்போது அதன் ஊழியர்கள் முதல் அவர்களின் குடும்பத்தினர்கள் வரை என 29,000 பேர் வசிப்பதாக கூறப்படுகிறது.

எனவே, தற்போதைய இந்த புதிய கூட்டாண்மை மூலம், எதிர்காலத்தில் அட்நாக் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள் அபுதாபி சிட்டிக்கும் அல் தனா சிட்டிக்கும் இடையே ரயிலில் பயணிக்கலாம் என்று இதன் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து Adnoc இன் CEO வும், அமீரகத்தின் தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப துறையின் அமைச்சருமான டாக்டர் சுல்தான் பின் அஹமது அல் ஜாபர் அவர்கள் கூறுகையில், இந்த ஒப்பந்தம் அமீரகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிப்பதில் Adnoc இன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், ​​2045 ஆம் ஆண்டில் பூஜ்ய உமிழ்வை நோக்கிய இலக்கின் முயற்சிகளை செயல்படுத்துவதை எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நிறுவனங்களுக்கு இடையேயான இந்த கூட்டாண்மையானது உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவங்களை வழங்குவதற்கான எதிஹாட் ரயிலின் எதிர்காலத் திட்டத்தை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி நீதிமன்றத்தின் அபிவிருத்தி மற்றும் தியாகிகள் குடும்ப விவகாரங்களுக்கான அலுவலகத்தின் தலைவர் ஷேக் தியாப் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான் கூறியுள்ளார்.

எதிஹாட் ரயிலின் வளர்ச்சி:

எதிஹாட் ரயிலானது கடந்த 2016ம் ஆண்டு  முதல் சரக்கு சேவைகளை அபுதாபியின் மேற்கு பகுதியில் வழங்கி வருகிறது. பின்னர் அமீரக குடியிருப்பாளர்களின் வசதிக்காக, அமீரகத்தின் 11 முக்கிய நகரங்களை இணைக்கும் நோக்கத்துடன் பயணிகள் ரயில் சேவையை தொடங்குவதாக கடந்த 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

மேலும், மணிக்கு 200 கிமீ வேகத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில் மூலம், அபுதாபியில் இருந்து துபாய்க்கு 50 நிமிடங்களில் பயணிக்கலாம் என்றும், இது 2030 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் 36.5 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் எதிஹாட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிஹாட் ரயில் தனது பயணிகள் சேவைகளின் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 2022 இல், ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கியுடன் (FAB) 1.99 பில்லியன் திர்ஹம்ஸ் பசுமைக் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதன்பிறகு ஜூன் 2022 இல் பயணிகள் ரயில்களை வடிவமைத்தல், தயாரித்தல், வழங்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிற்காக ஸ்பெயினின் CAF நிறுவனத்துடன் 1.2 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!