அமீரக செய்திகள்

அபுதாபி ஷேக் சையத் ஃபெஸ்டிவலின் யூனியன் தின சிறப்பு கொண்டாட்டம்.. பார்வையாளர்களை பிரம்மிப்பூட்டும் காட்சிகளின் பட்டியல் இதோ…

ஐக்கிய அரபு அமீரகம் நாளை டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அதன் 52வது யூனியன் தினத்தைக் கொண்டாட தயாராகி வருகிறது. இந்நிலையில், அபுதாபியின் அல் வத்பாவில் (Al Wathba) நடைபெறும் ஷேக் சையத் ஃபெஸ்டிவல் ஏற்பாட்டுக் குழு, யூனியன் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு செயல்பாடுகள் மற்றும் அற்புதமான நிகழ்ச்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், யூனியன் தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு அணிவகுப்பு, இருண்ட வானத்தை பிரகாசிக்கும் வகையில் கண்கவர் வானவேடிக்கை காட்சிகள், காண்போரை வியக்கவைக்கும் ட்ரோன் நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வசீகரிக்கும் எமிரேட்ஸ் நீரூற்று நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச நாடுகளின் சிறப்பு கலாச்சார அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஷேக் சையத் ஃபெஸ்டிவலின் ஏற்பாட்டுக்குழு “Hayakum” என்ற கருப்பொருளின் கீழ், இன்று முதல் மூன்று நாட்களுக்கு (டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில்) மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மூன்று நாட்களுக்கு யூனியன் தின சிறப்பு கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

தேசிய தின சிறப்பு கொண்டாட்டத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் நடைபெற உள்ளன என்பது பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

யூனியன் அணிவகுப்பு:

டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள யூனியன் அணிவகுப்பு, தேசபக்தி மற்றும் தேசத்திற்கும் அதன் தலைமைக்கும் சொந்தமான ஆழமான உணர்வை வெளிப்படுத்தும் கரும்பொருளை உள்ளடக்கியது. இது மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் கற்பனை செய்தபடி, அமீரகத்தின் நிலையான வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் கொள்கைகளை பிரதிபலிக்கும்.

அலங்காரங்கள்:

அங்குள்ள பந்தல்கள், மைதானங்கள் அனைத்தும் யூனியன் தினத்தை நினைவுகூரும் வகையில் சிறப்பு அலங்காரங்களால் அலங்கரிக்கப்படும். மேலும், நாட்டின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எண் 52 ஐ உள்ளடக்கிய விளக்கு அமைப்புகளால் ஒளியூட்டப்படும். இந்த அலங்காரங்கள் பார்வையாளர்களுக்கு பண்டிகை சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சிறப்பு நிகழ்வுகள்:

விருந்தினர்கள் யூனியன் தின கொண்டாட்டங்களுடன், ஆர்கெஸ்ட்ரா, பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் பல்வேறு UAE பாரம்பரிய இசைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் மற்றும் அபுதாபி போலீஸ் இசைக்குழுவின் வசீகரிக்கும் ரோமிங் நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் ரசிக்கலாம்.

ஹெரிடேஜ் வில்லேஜ்:

எமிராட்டி பாரம்பரியத்தின் கைவினைப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை ஹெரிட்டேஜ் வில்லேஜ் காட்சிப்படுத்தும். அதேசமயம், நாட்டின் 52வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், திருவிழாவில் பங்கேற்கும் நாடுகளின் பெவிலியன்கள் எண்ணற்ற செயல்பாடுகள் மற்றும் பாரம்பரிய மற்றும் பிரபலமான இசைக்குழுக்களின் தனித்துவமான கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.

வான வேடிக்கை மற்றும் ட்ரோன் காட்சிகள்:

பெரிய வானவேடிக்கைகள் அல் வத்பா பகுதியில் வானத்தை அலங்கரிக்கும் மற்றும் ட்ரோன் காட்சிகள், அற்புதமான கலை வரைபடங்களை உருவாக்கி பார்வையாளர்களை மயக்கும். அதேபோல், எமிரேட்ஸ் நீரூற்று நிகழ்ச்சிகள் துடிப்பான வண்ணங்கள், இசை மற்றும் லேசர் காட்சிகள் ஆகியவற்றைக் கொண்ட கண்கவர் நிகழ்ச்சிகளைக் காண்பிக்கும்.

போட்டிகள் மற்றும் பரிசுகள்:

யூனியன் தினத்தை நினைவுகூரும் கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக, அனைத்து வயது மற்றும் தேசிய பார்வையாளர்கள் “மிக அழகான எமிராட்டி பாரம்பரிய உடை” போட்டியில் மதிப்புமிக்க பரிசுகளுக்காக போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

அத்துடன் ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் எமிராட்டி ஹெரிடேஜ் கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் ‘மஜாலிஸ் அபுதாபி புகைப்பட விருது’ போட்டியில் பங்கேற்பதன் மூலம் அனைத்து வயது மற்றும் தேசிய இனத்தவரும் 25,000 ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பையும் பெறலாம்.

பல்வேறு கொண்டாட்டங்கள்

கூடுதலாக, குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் ‘ஃபன் சிட்டி’யில் பரபரப்பான ரைடுகளை அனுபவிக்கலாம். இவற்றுடன் யூனியன் அணிவகுப்பு, கார் ஷோ சேலஞ்ச், எமிரேட்ஸ் ஃபவுன்டைன், க்ளோ ஃப்ளவர் கார்டன், பறக்கும் உணவகம் மற்றும் குழந்தைகள் வில்லேஜ் என எண்ணற்ற பொழுதுபோக்கு செயல்பாடுகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் மூழ்கடிக்க காத்திருக்கின்றன.

அபுதாபியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் நடத்தப்படும் இந்த மாபெரும் ஃபெஸ்டிவல், வார நாட்களில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் அதிகாலை 1 மணி வரையிலும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!