அமீரக செய்திகள்

2024ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலை வெளியிட்ட அமீரகம்.. முழு விபரமும் உள்ளே..!!

நடப்பு ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசானது 2024 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பொது விடுமுறைகளின் முழு பட்டியலை வெளியிட்டுள்ளது. இது அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேதிகள் இஸ்லாமிய நாட்காட்டியின்படி வெளியிடப்பட்டுள்ளன. சில சமயங்களில் இது பிறை பார்ப்பதைப் பொறுத்து தேதிகள் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரக அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பொது மற்றும் தனியார் துறைகளுக்கான இந்த ஒருங்கிணைந்த பட்டியல் ஊழியர்களுக்கு சமமான விடுமுறை நாட்களை உறுதி செய்கிறது. அமீரக அரசாங்கம் பகிர்ந்துள்ள அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறைகளின் முழுப் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

புத்தாண்டு தினம்

அடுத்த வருடம் வரக்கூடிய புத்தாண்டானது ஜனவரி 1, திங்கள்கிழமை வருகிறது. இதனால் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் 2024 ஐ நீண்ட வார இறுதி விடுமுறையுடன் தொடங்குவார்கள். இதன் மூலம் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறை பெறும் நபர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் ஞாயிறு மட்டும் விடுமுறை உடையவர்களுக்கு இரண்டு நாள் வார விடுமுறையும் கிடைக்கும்.

ஈத் அல் ஃபித்ர்:

ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு அடுத்த வருடம் 6 நாள் விடுமுறை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இஸ்லாமிய பண்டிகையானது நோன்பு மாதமான ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. எனவே இஸ்லாமிய மாதமான ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை பொது விடுமுறை என்று அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த மாதம் முறையே 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்பதைப் பொறுத்து, நான்கு அல்லது ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, ரமலான் 29 நாட்கள் இருக்கும். இதன் அடிப்படையில், ஏப்ரல் 9, செவ்வாய் முதல் ஏப்ரல் 12, வெள்ளி வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இது சனி, ஞாயிறு விடுமுறை கொண்டவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்கக்கூடிய வாய்ப்பை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அரஃபா நாள், ஈத் அல் அதா:

அரஃபா தினம் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் 9 அன்று அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் அதா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஜூன் 16, ஞாயிறு முதல், ஜூன் 19, புதன் வரை விடுமுறை என கணிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை கொண்டவர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய புத்தாண்டு:

2024 ஆம் ஆண்டின் இஸ்லாமிய புத்தாண்டு முதல் நாளான முஹர்ரம் 1, வார இறுதி விடுமுறை நாளான ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்

இது இஸ்லாமிய மாதமான ரபி அல் அவ்வல் 12 வருகிறது. அன்றைய தினம் பொது விடுமுறை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

தேசிய தினம்

ஆண்டின் கடைசி அதிகாரப்பூர்வ விடுமுறையான தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 2, திங்கள் மற்றும் 3, செவ்வாய் ஆகிய நாட்களில் விடுமுறை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சனி-ஞாயிறு விடுமுறை உள்ள ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

 

Related Articles

Back to top button
error: Content is protected !!