ADVERTISEMENT

குவைத் மன்னரின் மறைவுக்கு அமீரகத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு!! இரங்கலைத் தெரிவித்த அமீரக தலைவர்கள்….!!

Published: 16 Dec 2023, 4:56 PM |
Updated: 16 Dec 2023, 4:56 PM |
Posted By: Menaka

குவைத் நாட்டின் மன்னர் எமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா அவர்கள் இன்று (சனிக்கிழமை) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ள ஷேக் முகமது பின் சயீத், இன்று முதல் நாட்டிலுள்ள அனைத்து அரசுத் துறைகளிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களிலும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தனது இரங்கலை X தளத்தில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் சபா அறுபது வருடங்களாக தனது நாட்டிற்கு சேவை செய்தார் மற்றும் நேர்மையுடன் தனது பங்கை நிறைவேற்றினார்” என்று எழுதியுள்ளார்.

ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் சபா 1921 முதல் 1950 வரை குவைத்தை ஆட்சி செய்து வந்த மறைந்த ஷேக் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவிற்கு, 1937 இல் ஐந்தாவது மகனாகப் பிறந்தார். தனது 25 வயதில் ஹவாலி மாகாணத்தின் ஆளுநராகப் பதவியேற்று அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1978 வரை உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

ADVERTISEMENT

அதன் பின்னர், 2020 ஆம் ஆண்டு தனது முன்னோடியான மறைந்த ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபாவின் மரணத்தைத் தொடர்ந்து குவைத்தின் எமீராகப் பதவியேற்றார். நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், இன்று மரணமடைந்தார்.

இவரையடுத்து, தற்போது 83 வயதாகும் ஷேக் மெஷல் அல் அஹ்மத் அல் ஜாபர் அவர்கள் குவைத்தின் ஆட்சியராக பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel