ADVERTISEMENT

UAE: பொது விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இழப்பீடு கிடைக்குமா? வேலைவாய்ப்புச் சட்டம் கூறுவது என்ன?

Published: 4 Dec 2023, 11:40 AM |
Updated: 4 Dec 2023, 11:40 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் 52வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது, மேலும், தனியார் மற்றும் பொதுத் துறை ஊழியர்களுக்கு டிசம்பர் 2, 3 மற்றும் 4 (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) ஆகிய தேதிகளை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அமீரக அரசு அறிவித்தது.

ADVERTISEMENT

இருப்பினும், பொது விடுமுறை நாட்களிலும் கூட ஒரு சில நிறுவனங்கள் பணிச்சுமை காரணமாக, வழக்கம் போல் வேலை செய்யும்படி ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இப்படியான சூழலில், ஊழியருக்கு மூன்று நாட்களுக்கான கூடுதல் ஊதியம் அல்லது மாற்று விடுமுறை கிடைக்குமா? அமீரகத்தின் வேலைவாய்ப்புச் சட்டம் கூறுவது என்ன? என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்:

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர், நாட்டின் உள்ளூர் அதிகாரசபை அல்லது மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் (MoHRE) அறிவிப்புகளின்படி பொது விடுமுறைக்கு தகுதியுடையவர் ஆவார்.

ADVERTISEMENT

இவ்வாறு அமைச்சரவையின் முடிவின்படி நிர்ணயிக்கப்பட்ட பொது விடுமுறை நாட்களில் ஊழியர் முழு ஊதியத்துடன் அதிகாரப்பூர்வ விடுப்பபைப் பெறுவதற்கு தகுதி உடையவர் என்று வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 28(1)இல் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 28(2)ன் படி, இதுபோன்ற பொது விடுமுறை நாட்களில் ஊழியரை வேலை செய்ய வைத்தால், அவர் பணிபுரியும் ஒவ்வொரு நாளுக்கும் மாற்று ஓய்வு நாள் அல்லது ஊதியம் வழங்கப்பட வேண்டும். சாதாரண வேலை நாட்களுக்கான அவரது சம்பளம் மற்றும் அந்த நாளுக்கான அவரது அடிப்படை சம்பளத்தில் குறைந்தபட்சம் (50%) ஐம்பது சதவிகிதம் கூடுதலாக ஊதியத்தைப் பெறுவதற்கு ஊழியருக்கு உரிமை உண்டு.

ADVERTISEMENT

ஆகவே, மேற்கூறிய சட்ட விதிகளின் படி, யூனியன் தின விடுமுறையின் போது, பணிபுரியுமாறு உங்கள் முதலாளி உங்களிடம் கேட்டால், பொது விடுமுறை நாட்களில் பணிபுரிவதற்காக 3 நாட்கள் இழப்பீட்டு விடுப்பு வழங்க உங்கள் முதலாளி கடமைப்பட்டிருக்கிறார்.

மாற்றாக, உங்கள் முதலாளி உங்களுக்கு 3 நாட்கள் இழப்பீட்டு விடுமுறையை வழங்குவதற்கு பதிலாக, பொது விடுமுறை நாட்களில் வேலை செய்வதற்கு கூடுதல் சம்பளத்தையும் உங்கள் அடிப்படை சம்பளத்தில் (basic salary) குறைந்தபட்சம் 50 சதவீதத்துடன் கூடுதல் தொகையையும் வழங்குவார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel