அமீரக செய்திகள்

UAE: ஏழு எமிரேட்டுகளையும் இணைக்கும் புதிய ஃபெடரல் நெடுஞ்சாலை.. அமீரக அரசாங்கம் ஆய்வு செய்யும் என தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு எமிரேட்டுகளையும் இணைக்கும் புதிய ஃபெடரல் நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய ஃபெடரல் நெடுழ்சாலைக்கான திட்டத்தை அமீரக அரசாங்கம் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் மற்றும் ஃபுஜைரா ஆகிய ஏழு எமிரேட்களையும் இணைக்கும் இந்த ஃபெடரல் நெடுஞ்சாலை கட்டப்பட்டால், இது ஏற்கனவே உள்ள ஷேக் சையத் சாலை, ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலை போன்ற பிற நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை ஜனவரி 24ம் தேதி ஃபெடரல் நேஷனல் கவுன்சிலில் (FNC) உரையாற்றிய எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் சுஹைல் பின் முகமது அல் மஸ்ரூயி அவர்கள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய சாலையை அமைக்க FNC சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சகம் ஆய்வு செய்யும் என்று கூறியுள்ளார்.

அவர் கூறிய படி, அதிகாரிகள் புதிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள பாதைகளுக்கு கூடுதல் பாதைகள் அமைப்பது தேவையா என்பதையும், மாற்று வழிகளில் போக்குவரத்தை திருப்பிவிடுவது உதவியாக இருக்குமா என்பதையும் உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து மதிப்பீடு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் இடையே போக்குவரத்தை எளிதாக்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய நடைமுறைகளை செயல்படுத்தும் என்பதையும் அமைச்சர் அல் மஸ்ரூயி வெளிப்படுத்தியுள்ளார். கூடுதலாக, போக்குவரத்து ஓட்டத்தை கண்காணிக்க ஒரு ஒருங்கிணைந்த மையம் மற்றும் நெரிசலுக்கான காரணங்களை மதிப்பிட AI போன்றவையும் போக்குவரத்துத் தீர்வுகளில் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள இந்த ஃபெடரல் சாலை திட்டத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய பிரத்யேக கண்காணிப்பு மையம், நெரிசலுக்கான காரணங்களைக் கண்டறிய AI ஐப் பயன்படுத்தி, 24 மணி நேரமும் போக்குவரத்தை மதிப்பிடும் என்று கூறப்பட்டுள்ளது.

முழுமையான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டதாகவும், தற்போது அமைச்சகம் உள்ளூர் நகராட்சிகளுடன் இணைந்து ஒப்புதல்களைப் பெறச் செயல்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!