ADVERTISEMENT

அபுதாபியில் நேற்று முதல் அமலுக்கு வந்த பொதுப் பேருந்திற்கான புதிய கட்டண முறை..!!

Published: 29 Feb 2024, 7:08 PM |
Updated: 29 Feb 2024, 7:08 PM |
Posted By: Menaka

அபுதாபியானது பொது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்காக நிலையான கட்டண முறை அறிவிக்கப்பட்டு அது விரைவில் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் ‘ஸ்டாண்டர்ட் சர்வீஸ் (standard service)’ எனும் நகரம் மற்றும் புறநகர் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் இந்த புதிய பொது போக்குவரத்து கட்டண முறையானது நேற்று (பிப்ரவரி 28, 2024) முதல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ITC தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பில், அபுதாபியில் உள்ள நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு அடிப்படை பேருந்து கட்டணம் இப்போது 2 திர்ஹம்ஸாகவும், ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 5 ஃபில்ஸ் ஆகவும் இருக்கும் என்றும், பேருந்து பயணத்தின் அதிகபட்ச கட்டணம் 5 திர்ஹம்ஸ் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

மேலும், ஒரு பயணி தனது இறுதி இலக்கை அடைய ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்தில் மாறி பயணிக்கலாம் மற்றும் இதற்கு அவர்கள் 2 திர்ஹம்ஸ் அடிப்படை கட்டணத்தை பல முறை செலுத்த வேண்டியதில்லை என்பதையும் ITC தெளிவுப்படுத்தியிருந்தது.

ADVERTISEMENT

இவ்வாறு பேருந்துகளில் தடையின்றி மாறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்:

  • பயணிகள் உரிய நேரத்திற்குள் பேருந்தை மாற்ற வேண்டும். அதாவது கடைசியாக டேப்-அவுட் செய்த ஒரு மணி நேரத்திற்குள் அடுத்த பேருந்திற்கு மாற வேண்டும்.
  • மாற்றங்களின் எண்ணிக்கை இரண்டு பேருந்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதாவது அதிகபட்சம் மூன்று பேருந்துகளைப் பயன்படுத்தி பயணத்தை முடிக்க வேண்டும்.
  • திரும்பும் பயணத்திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. அதாவது பயணத்தின் எதிர் திசையில் மாற்றம் இருக்கக்கூடாது.
  • அபுதாபி இணைப்பு சேவை மற்றும் பொது போக்குவரத்து பேருந்து நிலையான சேவைகள் இடையே பரிமாற்ற நிபந்தனைகள் பொருந்தும்.

பயண கட்டணம் எப்படி கணக்கிடப்படும்?

பயணிகள் ஏறும் இடத்திற்கும் இறங்கும் இடத்திற்கும் இடையே பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படுகிறது. பயணிகள் ஒவ்வொரு பேருந்திலிருந்தும் ஏறும் போதும் இறங்கும் போதும் ரீடரில் ‘hafalat’ ஸ்மார்ட் கார்டை டேப் செய்வது கட்டாயமாகும், இதன் மூலம் பயணிகள் ஏறும் இடத்திலிருந்து கடைசியாக இறங்கும் வரையிலான செலவு எளிதாக கணக்கிடப்படும்.

ADVERTISEMENT

ஒருவேளை, கார்டை டேப் செய்யத் தவறினால் அபராதம் மற்றும் கார்டை மீண்டும் பயன்படுத்தும் போது முழு பஸ் வழித்தடத்தின் கட்டணமும் கழிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒருவர் பேருந்துகளில் மாறி ஏறும் போது அல்லது மீண்டும் பஸ்ஸைப் பயன்படுத்தும் போது கார்டை டேப் செய்யத் தவறினால் பாதை முடியும் வரை பயணிகள் தொடர்ந்து சவாரி செய்வதாகக் கருதப்படுகிறது. ஆகவே, இவ்வாறு முழு கட்டணமும் வசூல் செய்யப்படும் என்பதையும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

பொது போக்குவரத்து பாஸ்கள்:

இந்த நிலையான கட்டண சேவையானது அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவில் உள்ள (இன்டர்சிட்டி சேவைகள் தவிர்த்து) நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது.

பாஸ் விலைகள்:

  • 7 நாள் பாஸ் கட்டணம்- 35 திர்ஹம்ஸ்
  • 30 நாள் பாஸின் விலை – 95 திர்ஹம்ஸ்
  • புதுப்பிக்கப்பட்ட பாஸ்கள் பிப்ரவரி 28, 2024 முதல் விற்கப்படும்.
  • முந்தைய முறையின் கீழ் செயல்படும் பாஸ்கள் பிப்ரவரி 27 முதல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்களுடன் துணையாக வரும் ஒரு நபருக்குமான இலவச வருடாந்திர பாஸ் மற்றும் 500 திர்ஹம் மதிப்புள்ள மாணவர்களுக்கான வருடாந்திர பாஸ்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பாஸ்கள் எமிரேட் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நிலையான சேவைக்கான கவரேஜைத் தொடர்ந்து வழங்கும். கூடுதலாக, 10 வயது மற்றும் அதற்கும் குறைவான நபர்களுக்கு போக்குவரத்து இலவசம் எனபதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, பிப்ரவரி 28 க்கு முன் வழங்கப்பட்ட அனைத்து பாஸ்களும் அவை காலாவதியாகும் வரை செல்லுபடியாகும் மற்றும் அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவில் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel