அமீரக செய்திகள்

UAE: 5 மில்லியன் திர்ஹம்ஸ் நஷ்டத்தை ஏற்படுத்திய ஆலங்கட்டி மழை..!! ஷோரூமில் இருந்த கார்கள் அனைத்தும் சேதம்….

அமீரக தொழிலதிபர் ஒருவர், இந்த வாரத்தின் தொடக்கத்தில் அல் அய்னில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையினால் தனது 47 புத்தம் புதிய மற்றும் பயன்படுத்திய கார்கள் சேதமடைந்ததாகவும், இதனால் தனக்கு 5 மில்லியன் திர்ஹம்ஸ் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அல் அய்ன் தொழில்துறை பகுதியில் உள்ள அல் மோட்டாமட் கார் ஷோரூமின் உரிமையாளர் முகமது ரஷீத் அப்துல்லா என்பவர், நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களிடம் பேசிய போது தனது 22 வருட வணிகத்தில் தனது மொத்த கார்களும் இயற்கை பேரிடரால் சேதமடைந்ததை எப்போதும் அனுபவித்ததில்லை என்று கூறியுள்ளார்.

வாரத்தின் முதல் நாளே நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இடைவிடாத மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அல் அய்னில் கோல்ஃப் பந்துகளின் அளவில் உள்ள ஆலங்கட்டிகள் மழை போல் பெய்தது. இது பல வருடங்களில் இதுவரை பார்த்திராத கடுமையான ஆலங்கட்டி மழை என்று அல்அய்னில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இப்படியான நிலையில் தனது ஷோரூமில் இருந்த கான்டினென்டல் பென்ட்லி, லெக்ஸஸ் மினி கூப்பர் போன்ற சொகுசு செடான்கள்; ரேஞ்ச் ரோவர்ஸ் மற்றும் பிற சிறந்த SUVகள்; முழு அளவிலான பிக்-அப் டிரக்குகள், சிறிய மற்றும் இடைப்பட்ட செடான் வகை கார்கள் பெரிதும் சேதமடைந்ததாகவும், அவற்றின் ஜன்னல்கள், பேனெட்டுகள் மற்றும் பாகங்கள் சிதைந்த நிலையில் ஆலங்கட்டிகளால் நொறுக்கப்பட்டதாகவும், மேலும் சில தண்ணீரில் மூழ்கியதாகவும் அப்துல்லா வேதனை தெரிவித்துள்ளார்.

அந்த சமயம், மழை பற்றிய எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பலத்த காற்று, வெள்ளம் மற்றும் ஆலங்கட்டி மழையால் விஷயம் தீவிரமடையும் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறிய அப்துல்லா, இந்த சேதங்களை ஈடுசெய்ய காப்பீடு இல்லாதது தனது வணிகத்தை மோசமாக பாதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, “காப்பீட்டு நிறுவனங்கள் கார்களை விற்ற பிறகுதான் காப்பீடு செய்கின்றன. கார் ஷோரூமுக்கான காப்பீடு, ஷோரூமில் ஏற்படும் தீ மற்றும் பிற சம்பவங்களுக்கு மட்டுமே காப்பீடு அளிக்கும், ஆனால் ஷோரூமில் உள்ள கார்களுக்கு இழப்பீடு கிடைக்காது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்சூரன்ஸ் கவரேஜ்:

இன்சூரன்ஸ் தளத்தின்படி, சூறாவளி (‘force majeure’) அல்லது இயற்கை பேரழிவுகள், உள்நாட்டு அமைதியின்மை அல்லது தனிநபர்கள் மற்றும் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிற எதிர்பாராத நிகழ்வுகள் போன்றவற்றை உள்ளடக்கும் ஒரு வகையான காப்பீடு உள்ளது. ஆனால் கார் ஷோரூமில் உள்ள தனிப்பட்ட மோட்டார் வாகனங்கள் அந்த கவரேஜில் சேர்க்கப்படவில்லை.

இது குறித்து PolicyBazaar.ae இல் ஹெல்த் மற்றும் மோட்டார் இன்சூரன்ஸின் வணிகத் தலைவர் தோஷிதா சௌஹான் என்பவர் பேசுகையில், “வாகனங்கள் வணிகத் திறன் கொண்டவை என்று கருதி, அப்துல்லா புதிய மற்றும் பயன்படுத்திய கார்களை விற்கிறார், ஆனால் கார்கள் சேமிப்பில் உள்ளன மற்றும் விற்பனைக்காக காத்திருக்கின்றன. ஆகவே, வழக்கமான மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி இங்கு பொருந்தாது. வாகனங்கள் சரக்குகளின் ஒரு பகுதியாகும். அவர் ‘property all risk’  எனப்படும் காப்பீட்டை எடுத்திருக்க வேண்டும். அப்போது, இது போன்ற வாகனங்களின் தற்போதைய மற்றும் எதிர்கால சரக்குகளை கவரேஜில் உள்ளடக்கியிருக்க முடியும்,” என்று சவுகான் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் சரிபார்ப்பு நேரத்தில் தயாரிப்பு, மாடல் மற்றும் கார் மதிப்புகள் போன்ற விவரங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தேவைப்படும். ஒரு சர்வேயர் பொதுவாக வந்து ஆபத்தை மதிப்பிட்டு அதற்கேற்ப பிரீமியம் மற்றும் காப்பீட்டுத் தொகை/துணை வரம்புகளை மேற்கோள் காட்டுவார். வாடிக்கையாளர்கள் எப்போதும் வெள்ளம் மற்றும் ஆலங்கட்டி புயல் பாதிப்பு போன்ற இயற்கை பேரிடர்களை பாலிசி கவரின் ஒரு பகுதியாக உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!