துபாய்: இனி சாலை விபத்து, விதிமீறல்களை அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்களிலேயே புகாரளிக்கலாம்.. புதிய சேவை அறிமுகம்…..
துபாயில் ஏதேனும் சாலை விபத்துகள் மற்றும் விதிமீறல்கள் அல்லது குற்றத்தைக் கண்டால் உடனடியாக அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் அவற்றைப் புகாரளிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
துபாய் காவல்துறை குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதேனும் தவறு நடந்தால் புகாரளிக்கவும், அதிகாரிகளிடமிருந்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் புதிதாக சேவையை அறிமுகம் செயதுள்ளது. இதனால், நீங்கள் எந்த காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.
துபாய் காவல்துறையானது பெட்ரோல் நிறுவனங்களான எமிரேட்ஸ் நேஷனல் ஆயில் கம்பெனி (Enoc), அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் Emarat ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆன்-தி-கோ என்ற புதிய சேவையை வழங்குகிறது.
இந்த சமீபத்திய சேவை தனிநபர்கள் விதிமீறல்களைப் புகாரளிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் பங்களிக்கவும் அதிகாரம் அளிப்பதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஆன்-தி-கோ முன்முயற்சியின் தலைவரான முதல் லெப்டினன்ட் மஜித் பின் சயீத் அல் காபி என்பவர் பேசுகையில், பெட்ரோல் நிலையங்களில் காவல்துறை சேவைகளை வழங்குவது உலகில் இதுவே முதல் முயற்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
துபாய் முழுவதும் உள்ள 138 பெட்ரோல் நிலையங்களில் பயிற்சியளிக்கப்பட்ட 11 நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 4,867 ஊழியர்களுடன் சேவைகள் வழங்கப்படுவதாகவும், அவர்கள் Enoc, Adnoc, Emarat, Dubai Taxi Corporation, Emirates Transport, International Centre for Security and Safety, First Security Group, Ward Security, Aman Security Training, Transguard Group மற்றும் Emirates Auctions ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அல் காபி மேலும் கூறியுள்ளார்.
‘Police Eye’ சேவைகள்:
புதிய முன்முயற்சியானது ‘போலீஸ் ஐ’ சேவைகளின் ஒரு பகுதியாகும். இது துபாய் போலீஸ் ஆப், இணையதளம் மற்றும் காவல் நிலையங்களில் கிடைக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் போலீஸ் ஐ சேவை மூலம், போக்குவரத்து விதிமீறல்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம், மனித கடத்தல் அறிக்கைகள், சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பிற விதிமீறல்கள் உள்ளிட்ட 108,100 க்கும் மேற்பட்ட தகவல்களை பொதுமக்களிடமிருந்து பெற்றதாக கடந்த மாதம் துபாய் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
எளிமையான போக்குவரத்து விபத்துகள் முதல் ஆன்லைன் மோசடிகள் வரை பல்வேறு குற்றங்களைப் புகாரளிக்கவும் போலீஸ் ஐ பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் வெளிநாட்டில் இருந்தும் போலீஸ் ஐ அப்ளிகேஷனிற்கு கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
ஆகவே, பொதுமக்கள் ‘போலீஸ் ஐ’ செயலி மூலமாகவோ அல்லது 901 என்ற எண்ணிலோ சாலைப் பாதுகாப்பு மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்குமாறு துபாய் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel