ADVERTISEMENT

கடந்த ஆண்டு மட்டும் 87 மில்லியன் பயணிகள் போக்குவரத்தைப் பதிவு செய்த துபாய் ஏர்போர்ட்..!! பயணிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்..!!

Published: 26 Feb 2024, 8:52 AM |
Updated: 26 Feb 2024, 8:58 AM |
Posted By: Menaka

உலகெங்கிலும் உள்ள சர்வதேச பார்வையாளர்களைக் கவரும் துபாய் சர்வதேச விமான நிலையமானது (DXB) கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 87 மில்லியன் பயணிகளைக் கண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு கணிசமான 32 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, COP28 நிகழ்வு மற்றும் ஆண்டின் இறுதி கட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களால், விமான நிலையத்தின் நான்காவது காலாண்டு போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், “இந்த செயல்திறன், துபாயின் முன்னணியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக 2022 ஆம் ஆண்டில், விமான நிலையம் 66 மில்லியன் பயணிகள் போக்குவரத்தை எட்டியது, அதைத் தொடர்ந்து துபாய் விமான நிலையம் 2023 இல் எட்டும் எண்ணிக்கை குறித்து சொந்த கணிப்புகள் வெளியிடப்பட்டும் இருந்தது. அந்த வகையில், கடந்த நவம்பர் மாதத்தில், எதிர்பார்க்கப்படும் பயணிகள் எண்ணிக்கை குறித்த கணிப்பை வெளியிட்டது. அந்த கணிப்பின்படி பயணிகளின் எண்ணிக்கை 86.8 மில்லியனாக இருந்தது. இது விமான நிலையத்தின் மதிப்பீடு சரியாக இருந்தது என்பதைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், தற்போது 2024 ஆம் ஆண்டில் DXBயின் பயணிகள் போக்குவரத்து 88.8 மில்லியனை எட்டும் என்று ஆரம்பக் கணிப்புகள் வெளியாகியுள்ளன, இது இதுவரை இல்லாதளவில் அதிகளவு பயணிகளைக் கையாண்ட 2018 இல் பதிவு செய்யப்பட்ட 89.1 மில்லியனை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், புதுமையான தொழில்நுட்பங்களுடன் விமான நிலைய சேவைகளை மேம்படுத்தி, பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க துபாய் நடவடிக்கை எடுத்து வருவதாக ஷேக் அகம்மது தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த நகரம் உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாகவும், சர்வதேச பயணிகளுக்கான உலகின் விருப்பமான நுழைவாயிலாகவும் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து துபாய் ஏர்போர்ட்ஸின் CEO பால் கிரிஃபித்ஸ் பேசுகையில், DXBக்கு 2023 ஒரு விதிவிலக்கான ஆண்டாகும், மேலும் இது புதுமை, செயல்திறன் மற்றும் முன்மாதிரியான விருந்தினர் அனுபவத்தை வழங்குவதில் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சுமார் 7.8 மில்லியன் பயணிகளை வரேவேற்று 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மிகவும் பரபரப்பான மாதமாக டிசம்பர் மாதம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நான்காவது காலாண்டில் மட்டும் சுமார் 22.4 மில்லியன் பயணிகள் DXB வழியாக பயணம் செய்துள்ளனர். இது ஆண்டுக்கு ஆண்டு 13.8 சதவீத வளர்ச்சியாகும்.

அதேபோல் கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, மூன்றாம் காலாண்டு 23 மில்லியன் பயணிகளுடன் 2019 முதல் அதிக பயணிகள் போக்குவரத்தைக் கொண்ட காலாண்டாக உள்ளது.

மேலும் துபாய்க்கு படையெடுக்கும் சர்வதேச பார்வையாளர்களில் 11.9 மில்லியன் பயணிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 6.7 மில்லியன் பயணிகளுடன் இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியாவும், 5.9 மில்லியனுடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மற்ற முக்கிய இடங்கள் பாகிஸ்தான் (4.2 மில்லியன்), அமெரிக்கா (3.6 மில்லியன்), ரஷ்யா (2.5 மில்லியன்), மற்றும் ஜெர்மனி (2.5 மில்லியன்) ஆகிய நாடுகள் ஆகும்.

அதனைத் தொடர்ந்து DXB வழியாக 3.7 மில்லியன் பயணிகளுடன் லண்டன், 2.6 மில்லியனுடன் ரியாத் , 2.5 மில்லியனுடன் மும்பை போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel