அமீரக செய்திகள்

கனமழையால் ஷார்ஜாவில் சேதமடைந்த வீடுகள்: 700 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக காவல்துறை அறிக்கை….

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாரத்தின் முதல் நாளே இடியுடன் கூடிய கனமழை, ஆலங்கட்டி மழை என மோசமான வானிலை நிலவியதால், மக்களின் குடியிருப்புகள் பலத்த மழையால்  சேதமடைந்ததாகவும், இதனால் ஷார்ஜாவில் வசிக்கும் 700 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்ததாகவும் ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழை மக்கள் குடியிருக்கும் வீடுகளை சேதப்படுத்தியதால், குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், அவ்வாறு வெளியேறிய 707 குடியிருப்பாளர்களுக்கும் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

மேலும், ஏற்ற இறக்கமான வானிலை காரணமாக, திங்களன்று ஒரேநாளில் அவசரமான அழைப்பு முதல் அவசரமற்றவை வரை செயல்பாட்டு அறைக்கு  21,635 அழைப்புகள் வந்ததாகவும், அவற்றிற்கு ஷார்ஜா காவல்துறை விரைந்து பதிலளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்ட கடைகள் மற்றும் வாகனங்களுக்கு 300 க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட (5,150 சான்றிதழ்கள்) மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணிக்கை குறைவு, கனமழையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அதிகமாக இருப்பதை பிரதிபலிப்பதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இத்தகைய மோசமான வானிலையை சமாளிக்க ஷார்ஜா காவல்துறை வகுத்த பாதுகாப்பு திட்டம், எமிரேட்டில் உள்ள அனைத்து அவசரகால பணியாளர்கள் மற்றும் துறைகள் மற்றும் சமூகத்தின் முயற்சியால் வெற்றி பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!