அமீரக செய்திகள்

அபுதாபி இந்து கோவிலை சுற்றிப்பார்க்க அனுமதி.. பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய 20 விஷயங்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட BAPS இந்து கற்கோவில், தற்போது அனைத்து மதத்தினரும், பார்வையாளர்களும் சென்று சுற்றிப்பார்க்க திறக்கப்பட்டுள்ளது.

கோவிலை சுற்றிப்பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு உதவவும், வழிகாட்டவும் தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிலில் உள்ளனர். இருப்பினும், கோவிலை சுற்றிப்பார்க்க செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமாகும்.

அவ்வாறு கோவிலுக்கு வருவதற்குத் திட்டமிடும் முன் பார்வையாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய அத்தியாவசியமான 20 விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்:

1. ஆடைக் கட்டுப்பாடு:

பார்வையாளர்கள் தங்கள் தோள்கள் மற்றும் முழங்கால்களை மறைக்கும் ஆடைகளை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஆடைகளில் புண்படுத்தும் வடிவமைப்புகள் மற்றும் வாசகங்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. வளாகத்தின் புனிதத்தன்மையை பராமரிக்க வெளிப்படையான, ஒளிஊடுருவக்கூடிய அல்லது இறுக்கமான ஆடைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு பார்வையாளர்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களால் அவர்களின் உடை பொருத்தமற்றதாகக் கருதப்பட்டால், அவர்களுக்கான நுழைவு மறுக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

2. செல்லப்பிராணிகளுக்கு தடை:

கோவில் வளாகத்திற்குள் விலங்குகள் நுழைய அனுமதிக்கப்படாததால், பார்வையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டு வர முடியாது.

3. வெளிப்புற உணவு அல்லது பானங்களுக்கு தடை:

கோவில் வளாகத்திற்குள் வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது. பார்வையாளர்களுக்கு உணவுகள் அங்கேயே கிடைக்கும்.

4. ட்ரோன்களுக்குத் தடை:

உள்ளூர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களிடம் தெரிவிக்கவில்லை என்றால், கோயில் வளாகத்திற்குள் ட்ரோன்களை பயன்படுத்த அனுமதி கிடையாது.

5. பெரியவர்கள் துணையின்றி வரும் குழந்தைகள்:

குழந்தைகளுக்குத் துணையாக பெரியவர்கள் இருந்தால் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் குழந்தைகள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

6. பேக்கேஜ் நிபந்தனைகள்:

பர்ஸ்கள் உள்ளிட்ட தனிப்பட்ட கைப்பைகள் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், கோவில் வளாகத்திற்குள் லக்கேஜ்கள், முதுகுப்பைகள் மற்றும் கேபின் சாமான்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பார்வையாளர்கள் இவற்றைக் கொண்டு வர வேண்டாம் அல்லது தங்கள் வாகனங்களில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும்.

7. ஆயுதங்கள் மற்றும் கூர்மையான பொருட்கள்:

கோவில் வளாகத்தின் நுழைவுப் பகுதியில் கத்திகள், லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள் போன்ற ஆபத்தான பொருட்களைக் கண்டறிந்து தடைசெய்ய எக்ஸ்-ரே ஸ்கேனர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே, பார்வையாளர்கள் ஒருபோதும் இத்தகைய பொருட்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்.

8. புகையில்லா மண்டலம்:

பார்க்கிங் பகுதிகள் உட்பட 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவில் முழுவதும், புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவை கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

9. மதுபானங்களுக்கு தடை:

கோவில் வளாகத்திற்குள் மதுபானங்கள் உட்பட மது அருந்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. போதையில் இருக்கும் பார்வையாளர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படும்.

10. வழிகாட்டிகள்:

பார்வையாளர்களுடன் வரும் கோயில் சுற்றுலா வழிகாட்டியின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே மொழிபெயர்ப்பு மற்றும் கோவில் தொடர்பான விளக்கச் சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன.

11. காலணி அகற்றுதல்:

இந்துக்களின் பாரம்பரியத்தை கடைபிடிக்க, பார்வையாளர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் காலணிகளை அகற்ற வேண்டும். ஷூ சேமிப்பிற்காக நியமிக்கப்பட்ட பகுதிகள் வழங்கப்படுகின்றன, மேலும் வெறுங்காலுடன் நடக்க வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட டைல்ஸ் கற்கள் நிறுவப்பட்டுள்ளன.

12. மொபைல் ஃபோன் பயன்பாடு:

கோயிலின் வெளிப்புறத்தை சுற்றி மொபைல் போன்கள் அனுமதிக்கப்பட்டாலும், கோவிலுக்குள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆன்மீக சூழலைப் பாதுகாக்க, அழைப்புகள், செல்ஃபிகள் அல்லது புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கிடையாது. ஆகவே, பார்வையாளர்கள் ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும் அல்லது சைலண்ட் மோடில் வைக்க வேண்டும்.

13. சக்கர நாற்காலி அணுகல்:

கோவிலில் சக்கர நாற்காலியில் வரும் பார்வையாளர்கள் தங்குவதற்கு வசதிகள் உள்ளன, இது ஒரு மென்மையான மற்றும் வசதியான அனுபவத்தை உறுதி செய்கிறது. மேலும், நுழைவு வாயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அணுகல் மற்றும் சிறப்பு உதவி வழங்கப்படும்.

14. அமைதியைக் கடைபிடித்தல்:

கோயிலுக்குள் ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனை செய்ய, சடங்குகள் செய்ய கூடுவதால், அங்கு ஆன்மீக சூழலைப் பாதுகாக்க பார்வையாளர்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

15. கலைப்படைப்பு பாதுகாப்பு:

கோயிலின் முகப்பு மற்றும் உட்புறத்தில் உள்ள நுட்பமான சிற்பங்கள், அலங்காரங்கள், ஓவியங்கள் போன்றவற்றை தொடுவதற்கு அனுமதி கிடையாது.

16. ஆராதனை அனுசரிப்பு:

கலாச்சார மரபுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கான மரியாதையின் அடையாளமாக கோவிலில் நடைபெறும் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளில் பார்வையாளர்கள் பங்கேற்கலாம்.

17. தெய்வங்களுக்கு மரியாதை:

கோயிலுக்குள் இருக்கும் சிலைகளை, அங்குள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைத் தொடுவதை பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

18. தூய்மை:

பார்வையாளர்கள் கோவில் வளாகத்தில் எச்சில் துப்புவதையோ அல்லது குப்பைகளை கொட்டுவதையோ தவிர்க்க வேண்டும். மேலும், வளாகத்தின் தூய்மையை பராமரிக்க, நியமிக்கப்பட்ட தொட்டிகளில் குப்பைகளை போட வேண்டும்.

19. காழ்ப்புணர்ச்சிக்கு தடை:

கோவில் சுவர்களிலோ அல்லது பிற இடங்களிலோ வேண்டுமென்றே எழுதுவது அல்லது வரைவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

20. புகைப்படம் எடுத்தல் மற்றும் பதிவு செய்தல்:

வணிகமற்ற நோக்கங்களுக்காக தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு அனுமதிக்கப்படுகிறது. வணிக அல்லது பத்திரிகை நோக்கங்களுக்காக புகைப்படம் எடுப்பதற்கு [email protected] ஐ தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற வேண்டும். பார்வையாளர்கள் நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் எழுத்துப்பூர்வ அனுமதியைக் காட்ட வேண்டும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!