ADVERTISEMENT

ரமலானை முன்னிட்டு அபுதாபியில் குறிப்பிட்ட வாகனங்களுக்கான போக்குவரத்து தடை நேரத்தில் மாற்றம்..!!

Published: 11 Mar 2024, 1:23 PM |
Updated: 11 Mar 2024, 1:23 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் புனித ரமலான் பண்டிகையின் போது தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து தடை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து காவல்துறை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அபுதாபி மற்றும் அல் அய்ன் சிட்டிக்குள் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு இந்த தடை பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய செயல்பாட்டுத் துறையின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ரோந்து இயக்குநரகத்தின் இயக்குனர் ஜெனரல் மஹ்மூத் யூசுப் அல் பலுஷி கூறுகையில், அபுதாபி சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அல் பலுஷியின் கூற்றுப்படி, புனித ரமலான் மாதத்தில் அபுதாபி மற்றும் அல் அய்ன் நகரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை இந்த தடை அமல்படுத்தப்படும். அதேபோன்று மாலையில் 2 மணி முதல் 4 மணி வரை தடை இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் என்றும் ஸ்மார்ட் சிஸ்டம் மூலம் போக்குவரத்து கட்டுப்பாடு எமிரேட் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அபுதாபி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel