அமீரக செய்திகள்

ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள்.. களத்தில் 2,300 பணியாளர்கள்.. கனமழை தாக்கத்தை துபாய் சமாளித்தது எப்படி..??

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 10,232 அவசர அழைப்புகளைப் பெற்றதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துபாய் காவல்துறை வெளியிட்ட தகவல்களின் படி, காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை அவசரகால ஹாட்லைன் 999 எண்ணுக்கு 9,275 அழைப்புகளும், ஹாட்லைன் 901 க்கு 957 அழைப்புகளும் வந்துள்ளன என கூறியுள்ளது.

இத்தகைய மோசமான வானிலைக்கு மத்தியில், அவசரநிலைகளுக்கு பதிலளிக்கவும், கனமழையின் பாதிப்பைத் தணிக்கவும் துபாய் முனிசிபாலிட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் போலீஸ், முகமது பின் ரஷீத் ஹவுசிங் எஸ்டாப்லிஷ்மென்ட் மற்றும் நக்கீல் (Nakheel) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து மொத்தம் 2,300 பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த குழுக்கள் 250 டேங்கர்கள், 300 மழைநீர் பம்புகள், 180 க்கும் மேற்பட்ட அவசரகால வாகனங்கள், கள ஆய்வு வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் பிற கனரக உபகரணங்கள் உட்பட 700 யூனிட் உபகரணங்களுடன் சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ள நீரை அகற்றுவது உட்பட கனமழையின் தாக்கத்தை திறம்பட எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது பற்றி துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், துபாயின் அவசரகால பதிலளிப்பு குழுக்கள் எமிரேட் முழுவதும் அவசரகால சூழ்நிலைகளை நிர்வகிப்பதில் அதிக அளவு தயார்நிலையை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் எமிரேட்டில் தீவிரமடையும் வானிலையை கருத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அவசரகால சூழ்நிலைகளுக்கு மட்டும் 999ஐ அழைக்கவும், மற்ற அனைத்து அவசர தேவைகளுக்கு 901ஐப் பயன்படுத்தவும் துபாய் காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, அமீரகத்தில் ஏற்ற இறக்கமான காலநிலை முடியும் வரை, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறும் வாகன ஓட்டிகளை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இவை தவிர, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கனமழையால் ஏற்படக்கூடிய ஏதேனும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அதிகாரிகள் விரிவான திட்டத்தை வகுத்துள்ளனர். துபாய் முழுவதும் கனமழை ஏற்படுத்திய தாக்கத்தை சமாளிக்கவும், தணிக்கவும் களக் குழுக்கள் முந்தைய மழைக்காலங்களில் இருந்து வரலாற்றுத் தரவு மற்றும் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், சீரான போக்குவரத்து ஓட்டத்தை பராமரிக்கவும், தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் முன்கூட்டிய திட்டமிடல் மற்றும் சூழ்நிலை உருவாக்கம் ஆகியவை குழுவினருக்கு உதவியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுமக்கள் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் துபாய் முனிசிபாலிட்டி, RTA மற்றும் முகமது பின் ரஷீத் ஹவுசிங் எஸ்டாப்லிஷ்மென்ட் ஆகியவற்றின் ஸ்மார்ட் ஆப்ஸ் மூலமாகவோ அல்லது அவர்களின் தொடர்பு மையங்களின் மூலமாகவோ முறையே 800900, 8009090, 80030 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!