அமீரக செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?? ஆதார் பெற இந்தியாவில் இருப்பது கட்டாயமா..??

ஆதார் என்பது இந்தியாவில் வசிப்பவர்களின் அடையாளம், வயது மற்றும் முகவரியை நிரூபிக்கக்கூடிய பயோமெட்ரிக் தரவுகளுடன் இணைக்கப்பட்ட தனித்துவமான 12 இலக்க எண்ணாகும். ஆதார் அட்டை இல்லாமல் வெளிநாடுகளில் வசிப்பவர்கள், பெரும்பாலும் தங்களின் சொந்த ஊருக்கு செல்லும் போதே ஆதாருக்கு விண்ணப்பிக்கின்றனர்.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவருமே ஆதார் அட்டையை பெற விரும்பினால், அதற்கான விண்ணப்ப செயல்முறை மற்றும் தேவையான ஆவணங்கள் போன்ற விபரங்களைத் தெரிந்து கொண்டு எளிதாக சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்னரே ஆதார் கார்டிற்காக விண்ணப்பிக்கலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

மேலும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) NRIகளுக்கு என ‘Aadhaar on Arrival’ என்ற விருப்பத்தைக் கொண்டுள்ளது. அதன்படி, ஒரு NRI அவரது ஆதார் அட்டையைப் பெறுவதற்கான அப்பாய்மெண்ட்டை ஆன்லைனில் பெறலாம். இருப்பினும், அவர்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்க இந்தியாவில் இருப்பது அவசியமாகும்.

இந்த ஆதார் கார்டு நிரந்தரமாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு (NRI) தேவையில்லை என்றாலும், அவர்கள் விருப்பப்பட்டால் விண்ணப்பிக்கலாம். ஏனெனில், அவர்கள் இந்தியாவிற்கு திரும்ப அல்லது நீண்ட காலத்திற்கு இந்தியாவில் தங்க திட்டமிட்டால், அப்போது வங்கிக் கணக்குகளைத் திறப்பது, சொத்துக்களை வாடகைக்கு எடுப்பது, பிற நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பல்வேறு விதமான அரசாங்க செயல்முறைகளை முடிக்க ஆதார் கார்டு அவசியம் தேவைப்படும்.

ஆதார் அட்டைக்கான படிவங்கள்:

வயது வாரியாக ஆதார் அட்டைக்கான பின்வரும் படிவங்கள் நிரப்பப்பட வேண்டும்:

  • படிவம் 1: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு
  • படிவம் 2: இந்தியாவிற்கு வெளியே உள்ள முகவரியுடன் பதிவு செய்யும் அல்லது புதுப்பிக்கும் NRIகளுக்கு.
  • படிவம் 3: 5 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குடியிருப்பாளர்கள் அல்லது இந்திய முகவரிச் சான்றுடன் இருக்கும் NRIகள்.
  • படிவம் 4: இந்திய முகவரிச் சான்று இல்லாமல் அதே வயதுடைய NRI குழந்தைகளுக்கு.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

முதலில் உங்கள் ஆதாருக்கான அப்பாய்மெண்ட்டை ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைன்: UIDAI இணையதளத்திற்குச் சென்று, உங்கள் இருப்பிடத்தைத் தேர்வுசெய்து, உங்களின் இந்திய மொபைல் எண்ணை வழங்கவும் மற்றும் அப்பாயிண்ட்மெண்ட்டை முன்பதிவு செய்யவும். இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதாகவே நீங்கள் அப்பாய்மெண்ட்டை பதிவு செய்யலாம்.

ஆஃப்லைன்: நீங்கள் ஆதார் மையத்திற்குச் சென்று பயோமெட்ரிக் அப்பாயிண்ட்மெண்ட் எடுக்கலாம்.

ஆவணங்களை சமர்ப்பித்தல்

அப்பாய்மெண்ட் பெற்றபின், நீங்கள் UIDAI பதிவு மையத்திற்குச் செல்லும்போது தேவையான அனைத்து ஆவணங்களையும் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

பயோமெட்ரிக் செயல்முறை:

உங்கள் பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய, UIDAI பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்களின் 10 விரல்கள் மற்றும் கருவிழிகள் ஸ்கேன் செய்யப்பட்டு பயோமெட்ரிக் தரவு எடுக்கப்படும். இதையடுத்து, இந்தியாவில் உள்ள உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு 90 நாட்களுக்குள் உங்கள் ஆதார் அட்டை அனுப்பப்படும்.

NRI ஆதார் அட்டைக்கு தேவையான ஆவணங்கள்

  • அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றிற்காக உங்களின் இந்திய பாஸ்போர்ட்
  • உங்களிடம் சரியான இந்திய முகவரி சான்று இல்லாத நிலையில், UIDAI அங்கீகரிக்கப்பட்ட மற்ற முகவரிச் சான்று (PoA) ஆவணங்களான PAN, பயன்பாட்டு பில்கள் போன்றவற்றை வழங்கலாம்.
  • நீங்கள் வசிக்கும் நாட்டின் முத்திரையிடப்பட்ட விசாவின் புகைப்பட நகல் போன்ற, வேறொரு நாட்டில் உங்கள் ரெசிடென்ஸி நிலைக்கான ஆதாரங்களுக்காக மற்ற ஆவணங்களும் உங்களிடம் கேட்கப்படலாம்.
  • அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கான பிறப்புச் சான்றிதழ்
  • NRI குழந்தைகளுக்கு, செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!