அமீரக செய்திகள்

துபாயில் இந்தியாவின் கலாச்சாரத்தை கொண்டாடும் மூன்று நாள் நிகழ்வு.!! அனைவருக்கும் இலவச அனுமதி.!!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஒத்துழைப்பின் மதிப்பைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக இந்தியாவின் கலாச்சாரத்தைக் கொண்டாடும் மூன்று நாள் நிகழ்வு எதிர்வரும் மார்ச் 8 முதல் 10 வரை துபாய் க்ரீக்கில் அமைந்துள்ள அல் சீஃப் பூங்காவில் நடைபெற உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடும் விதமாக முதல் முறையாக நடத்தப்படவிருக்கும் ‘இந்தியா பை தி க்ரீக்’ இன் முதல் பதிப்பு, துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவின் ஆதரவுடன் இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து துபாய் டூட்டி-ஃப்ரீயால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மைல்கல்லைக் குறிக்கும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்படவிருப்பதாகவும் இதன் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சதீஷ் குமார் சிவன் பேசுகையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே வெறும் வர்த்தகம் மட்டும் இல்லாமல் வணிக நலன்களுக்கு அப்பாற்பட்ட தனித்துவமான மற்றும் விதிவிலக்கான நல்லுறவு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “இரு நாடுகளுக்கும் இடையேயான பிணைப்பிற்கு அவற்றின் கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை தூண்டுதலாக இருக்கின்றன. அந்த உணர்வை இந்த விழா கொண்டாடுகிறது. இது வெறும் ஆரம்பம் தான், இதுபோன்ற இன்னும் பல பரிமாற்றங்கள் நடைபெற உள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் நிகழ்ச்சிகளின் வரிசை:

அனைத்து வயதினருக்கும் இலவச அனுமதியை வழங்கும் ‘இந்தியா பை தி க்ரீக்’  நிகழ்வின் முதல் பதிப்பில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், இலக்கிய விவாதங்கள், கவிதை, சமையல் அனுபவங்கள் மற்றும் ஒர்க் ஷாப்புகள் ஆகியவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மூன்று நாட்களில், இந்தியா மற்றும் அமீரகத்தைச் சேர்ந்த கலைஞர்களின் ஒருங்கிணைந்த படைப்பாற்றலால் துபாய் க்ரீக் விழாக் கோலம் பூண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் மற்றும் கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளதாகவும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மற்றும் எமிராட்டி கலாச்சாரம் இரண்டையும் தனித்துவமான மற்றும் துடிப்பான முறையில் கலக்கும் ஒரு வளமான கலாச்சார ஒத்துழைப்பாக இருக்கும் இந்த க்ரீக் திருவிழாவின் மூலம், இந்தியாவின் ஸ்பான்சராக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக துபாய் டூட்டி ஃப்ரீயின் COO ரமேஷ் சித்தம்பி தெரிவித்துள்ளார். மேலும், துபாய் டூட்டி ஃப்ரீயின் வணிகத்தில் 10 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளதாகவும், துபாய் டூட்டி ஃப்ரீயின் வாடிக்கையாளர்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!