அமீரக செய்திகள்

UAE: ரமலான் மாதத்தில் தினமும் 71 இடங்களில் 35,300 பேருக்கு இஃப்தார் உணவுகளை விநியோகம் செய்யும் அமைப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் ரமலான் மாதத்தில் தங்களது நோன்பை நிறைவேற்றி சூரியன் மறையும் நேரத்தில் மக்களோடு மக்களாக இஃப்தார் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பாரம்பரிய நடைமுறையாகும். இந்த இஃப்தார் நிகழ்விற்காக அமீரகத்தின் பல பகுதிகளிலும் ‘ரமலான் டென்ட்’ எனும் கூடாரம் அமைக்கப்பட்டு நோன்பு கடைபிடிப்பவர்கள் தங்களது நோன்பை முடித்துக்கொள்ள தேவையான உணவுப்பொருட்கள் ஒவ்வொரு வருட ரமலான் மாதத்திலும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், துபாயில் உள்ள அபு ஹைல் (Abu Hail), ஹோர் அல் அய்ன்ஸ் (Hor Al Ainz), பராஹா (Baraha) மற்றும் பிற அண்டை பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் மாலை சரியாக 5:30 மணியளவில் பெய்த் அல் கீர் சொசைட்டியால் (Beit Al Kheir Society) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இஃப்தார் விருந்து நடைபெறும் கூடாரத்திற்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அமைப்பானது அமீரகத்தில் 71 இடங்களுக்கு, ரமலான் மாதத்தில் தினமும் 35,300 உணவுகளை விநியோகம் செய்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இஃப்தார் உணவுகள் நாடு முழுவதும் 55 சமையலறைகளில் தயாரிக்கப்படுவதாகவும், 94 தன்னார்வலர்கள் குழு விநியோகத்தை தடையின்றி செயல்படுத்துவதை உறுதி செய்வதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, பழைய துபாயின் (Old Dubai) ஹோர் அல் அய்ன்ஸ் சுற்றுப்புறத்தில் மட்டும், தன்னார்வலர்கள் 3,500 க்கும் மேற்பட்ட நபர்களை இஃப்தாருக்காக வரவேற்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த இப்தார் கூடாரத்தில் நோன்பை முடிக்க வரும் நோன்பாளிகளுக்கு சுவையான மட்டன் மந்தி பரிமாறப்படுவதுடன், லபன், அரிசி, ஹரீசா, தண்ணீர், பழங்கள், பேரீச்சம் பழங்கள் மற்றும் இனிப்புகள் அடங்கிய இஃப்தார் பாக்ஸூம் வழங்கப்படுகிறது.

தன்னார்வலர்களின் பங்களிப்பு:

இதற்கிடையில், தன்னார்வலர்கள் பலரும் நோன்பு கடைபிடித்த போதிலும், அதிகாலை முதலே இஃப்தாருக்கான உணவைத் தயாரித்து பேக் செய்யத் தொடங்கிவிடுவதாகவும், விருந்தினர்கள் கூடுவதற்கு முன்பு மாலை 4:00 மணிக்கு தன்னார்வலர்கள் கூடாரத்தை சுத்தம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், மாலை 5:30 மணிக்கு, தன்னார்வலர்கள் இஃப்தார் விருந்துக்கு வசதியாக மக்களை நேர்த்தியான வரிசைகளில் அமரச் செய்து, உணவு உடனடியாகவும் கவனமாகவும் வழங்கப்படுவதை உறுதிசெய்து மேற்பார்வை செய்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, விருந்தினர்கள் இஃப்தாரை முடித்தவுடன், தன்னார்வலர்கள் கூடாரத்தை விரைவாக சுத்தம் செய்து, மறுநாள் இஃப்தார் விருந்துக்கு வரவேற்க அதை தயார் செய்கிறார்கள்.

நன்றி தெரிவிக்கும் நோன்பாளிகள்:

இந்த அமைப்பு வழங்கும் இஃப்தார் உணவுக்கு பல இஸ்லாமியர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி நோன்பை முடிக்க கூடாரத்திற்கு தவறாமல் வருகை தரும் நபர்கள் கூறுகையில், “பெய்த் அல் கீர் சொசைட்டி வழங்கும் இஃப்தார் எங்களுக்கு ஒரு வரம். எந்த மன அழுத்தமும் இல்லாமல் எங்கள் இஃப்தார் உணவை அனுபவிக்க முடியும்,” என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிலர் கூடாரத்திலிருந்து தங்கள் உணவை எடுத்துக்கொண்டு, சாலையோரம் உள்ள புல்வெளியில் அமர்ந்து, அமைதியான சூழலை ரசித்து, ஒன்றாக உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதுமுண்டு.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!