ADVERTISEMENT

ஷார்ஜாவில் திறக்கப்பட்டுள்ள புதிய பொழுதுபோக்கு இடம்.. பல்வேறு வசதிகளுடன் மலைகளுக்கு மத்தியில் உள்ள அழகிய ஏரியானது பார்வையாளர்களுக்காக திறப்பு..!!

Published: 31 Mar 2024, 8:24 PM |
Updated: 31 Mar 2024, 8:25 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச பார்வையாளர்களைக் கவரந்திழுக்கக் கூடிய ஏராளமான சுற்றுலாத் தலங்களும் பொழுதுபோக்கு இடங்களும் உள்ளன. அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை முக்கியப் பங்காற்றும் நிலையில், ஏற்கனவே உள்ள சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தவும், புதிய ஈர்ப்புகளை உருவாக்கவும் அமீரக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

அதே போல் ஷார்ஜாவிலும் சுற்றுலா துறையை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, ஷார்ஜாவில் இந்த மாத தொடக்கத்தில், 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 100,000 மரங்களைக் கொண்ட தொங்கும் தோட்டம் குடியிருப்பாளர்களுக்காக கல்பாவில் திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காகவே ஷார்ஜா நகரத்தில் தற்பொழுது புதிய பொழுதுபோக்கு இடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா-கல்பா சாலையில் அமைந்துள்ள அல் ஹெஃபாய்யா (Al Hefaiyah) என்று அழைக்கப்படும் இந்த ஏரியானது, ஷார்ஜாவின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஆட்சியாளருமான ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் ஷார்ஜாவின் பட்டத்து இளவரசரும் துணை ஆட்சியாளருமான ஷேக் சுல்தான் பின் முகமது பின் சுல்தான் அல் காசிமி மற்றும் ஷார்ஜாவின் துணை ஆட்சியாளர் ஷேக் அப்துல்லா பின் சலேம் பின் சுல்தான் அல் காசிமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த ஏரியைச் சுற்றிலும் சுமார் 3.17 கிலோமீட்டர் நீளத்திற்கு இரட்டை வழிச் சாலை அமைந்துள்ளது, மேலும் சுற்றுலாப் பயணிகள், அங்கு 620 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியுடன், நீர்நிலையின் அழகிய காட்சியைக் கண்டு மகிழலாம் என கூறப்பட்டுள்ளது.

இது தவிர, இந்த அல் ஹெஃபாயா ஏரி திட்டத்தில் 500 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள Al Hefaiyah ரெஸ்ட் ஹவுஸ் உள்ளது, அங்கிருந்து ஏரி மற்றும் கல்பாவின் உயரமான மலைகளை நேரடியாகப் பார்க்க முடியும். மேலும் ஒருபுறம் தொங்கும் தோட்டங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் மறுபுறம் 8,500 சதுர மீட்டர் விளையாட்டுப் பகுதி மற்றும் பசுமையான இடம் போன்றவற்றையும் ரசிக்கலாம்.

கட்டமைப்பு:

இந்த ஏரி 132,000 சதுர மீட்டரில் பரந்து விரிந்துள்ளது, மேலும் மலைப்பாங்கான காலநிலைக்கு ஏற்ற புதுமையான கட்டுமான பொருட்கள், உபரி நீர் சேமிப்புக்காக மலைகளையும் ஏரியையும் இணைக்கும் குழாய்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் பள்ளத்தாக்கு ஓடை மேலாண்மை உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

155 மில்லியன் கேலன் கொள்ளளவு மற்றும் நான்கு மீட்டர் ஆழம் கொண்ட இந்த நீர்த் தேக்கம், தாழ்வான பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள மலைகளில் இருந்து தண்ணீரை கொண்டு வர 3.2 கிலோமீட்டர் நீளமுள்ள நீர் வழித்தடத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக, பள்ளத்தாக்கு நீரானது ஏரிக்குள் நுழைவதைக் குறைக்கவும், அசுத்தங்கள் மற்றும் வண்டல்களை சுத்தப்படுத்தவும் மூன்று தடுப்புகள் மற்றும் ஃபில்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த ஏரிக்கு அருகில் 11.7 கிமீ நீளம் கொண்ட மலைப் பாதை ஒன்று உள்ளது, இது  அல் ஹெஃபாயா ஏரி பாதை, கிழக்கு மலைப் பாதை, தெற்கு அல் ஃப்ரீஷ் மலைப் பாதை, வடக்கு அல் ஃப்ரீஷ் மலைப் பாதை மற்றும் அல் ஃப்ரீஷ் ஏரிப் பாதை உள்ளிட்ட பல்வேறு நீளம் மற்றும் அளவுகளைக் கொண்ட பாதைகளை உள்ளடக்கியதாக கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த புதிய பகுதியில் 495 வழிபாட்டாளர்கள் தங்கக்கூடிய அளவிற்கு ஒரு மசூதியும் உள்ளது. சுமார் 852 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதி, ஃபாத்திமிட் பாணியில் (Fatimid style) வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel