துபாய்: சாலைகளில் டிரக் செல்வதற்கான தடை நேரம் மாற்றியமைப்பு!! ரமலானை முன்னிட்டு நடவடிக்கை..!!

துபாயில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பல்வேறு மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முக்கிய வழித்தடங்கள் மற்றும் பகுதிகளில் லாரிகளுக்கு தடை விதிக்கப்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணைய (RTA) அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரமலான் மாதம் முழுவதும் E11 நெடுஞ்சாலையில் லாரிகளுக்கான தடை என்பது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்று இருந்ததற்கு பதிலாக காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அல் இத்திஹாத் ஸ்ட்ரீட், ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் சயீத் சாலை வழியாக ஷார்ஜா எல்லையில் இருந்து இன்டர்சேஞ்ச் எண். 7 வரை நீட்டிக்கப்படும் நடைபாதையிலும், தேரா மற்றும் பர் துபாயின் மத்திய பகுதிகளிலும் இந்த நேரங்கள் பொருந்தும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு நாளைக்கு மூன்று முறை டிரக்குகள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டிருக்கும் பல தெருக்களும் உள்ளன. இவற்றில், காலை மற்றும் மதியம் தடை நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலான தடைக்குப் பதிலாக காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் வழக்கமான மதியம் 1 மணி முதல் 3 மணி வரையிலான தடைக்கு பதிலாக மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தடை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இவைதவிர, அல் ஷிந்தகா டனல், அல் மக்தூம் ப்ரிட்ஜ், ஃப்ளோட்டிங் பிரிட்ஜ், அல் கர்ஹூத் ப்ரிட்ஜ், பிசினஸ் பே ப்ரிட்ஜ், இன்ஃபினிட்டி ப்ரிட்ஜ் மற்றும் ஏர்போர்ட் சுரங்கப்பாதை ஆகியவற்றில் ஆண்டு முழுவதும் டிரக் இயக்கம் தடை செய்யப்படட்டுள்ளது.
முக்கியமாக ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில், மதியம் 1 மணி முதல் 3 மணி வரையிலான டிரக் தடைக்கு பதிலாக 12 மணி முதல் 3 மணி வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோலவே, அபுதாபி மற்றும் அல் அய்ன் நகரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel