ADVERTISEMENT

அமீரகத்தில் புதிதாக 10 மற்றும் 5 வருட பிஸினஸ் லைசென்ஸை அறிமுகப்படுத்த திட்டம்..!! அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் தகவல்..!!

Published: 28 Mar 2024, 9:51 AM |
Updated: 28 Mar 2024, 9:53 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் நாட்டின் வருவாயை அதிகரிக்கவும், வணிகத்தை ஊக்குவிக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்தவும், 10 ஆண்டுகளுக்கான கோல்டன் பிஸினஸ் லைசென்ஸ் மற்றும் ஐந்தாண்டு சில்வர் பிஸினஸ் லைசென்ஸ் உள்ளிட்ட நீண்ட கால லைசென்ஸ்களை அறிமுகப்படுத்துவது குறித்து விவாதித்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் நேற்று புதன்கிழமையன்று (மார்ச் 27) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு (2024 Economic Integration Committee) சந்திப்பின் போது, அமீரகத்தில் பிஸினஸ் லைசென்ஸ்களுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவு குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் தூக் அல் மர்ரி (Abdulla bin Touq Al Marri) அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் டாக்டர் தானி பின் அஹ்மத் அல் சியோதி (Dr. Thani bin Ahmed Al Zeyoudi) மற்றும் அனைத்து எமிரேட்களின் பொருளாதார மேம்பாட்டுத் துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கலந்துரையாடியுள்ளனர்.

ADVERTISEMENT

அப்போது, அமீரகத்தில் பொருளாதார முன்முயற்சிகளை மேம்படுத்துவது மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து அனைவரும் விவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், 5 வருட சில்வர் லைசென்ஸ் மற்றும் 10 வருட கோல்டன் லைசென்ஸ் ஆகிய இரண்டையும் போட்டி விலையில் வழங்குவது உட்பட, நாட்டில் வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் இந்த கமிட்டி ஆலோசித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமீரகத்தில் அரசாங்க வருவாயை உயர்த்துவதையும், வணிக தொடர்ச்சியைத் தூண்டுவதையும், “We are the UAE 2031” என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் பின் தூக், அமீரகத்தின் நெகிழ்வான மற்றும் போட்டித்தன்மையுள்ள பொருளாதாரக் கொள்கைகள், புத்திசாலித்தனமான தலைமையால் வழிநடத்தப்பட்டு, வணிகங்கள் மற்றும் பொருளாதார முயற்சிகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமீரகத்தின் இந்த அணுகுமுறை சர்வதேச அளவில் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் மூலதன உரிமையாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்குதாகவும், இதன் விளைவாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 788,000 நிறுவனங்கள் என வெளிநாட்டு நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel