ADVERTISEMENT

அபுதாபி இந்து கோவிலில் அலைமோதும் கூட்டம்.. காத்திருப்பை குறைக்க ‘முன்பதிவு செயல்முறை’ அறிமுகம்..!!

Published: 10 Apr 2024, 10:30 AM |
Updated: 10 Apr 2024, 10:35 AM |
Posted By: Menaka

அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் அமைந்துள்ள BAPS இந்து கற்கோவிலை பார்வையிட தற்போது புதிதாக முன்பதிவு செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் முதல் பாரம்பரிய கோவிலான BAPS இந்து கோவிலுக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக மேம்படுத்தும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், இது பார்வையாளர்களுக்கு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை உறுதி செய்வதுடன், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களின் வருகையை நிர்வகிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் கட்டப்பட்ட BAPS இந்து கோவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டதிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும், பக்தர்களும் வருகை தருகின்றனர். மேலும், தற்போது பள்ளி விடுமுறை மற்றும் ஈத் விடுமுறையை முன்னிட்டு குடும்பங்களின் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அத்துடன் வெவ்வேறு இந்து பண்டிகைகள் காரணமாக கடந்த வாரம் கோவிலுக்கு அதிகளவிலான பார்வையாளர்களும் வருகை தந்துள்ளனர்.

ADVERTISEMENT

குறிப்பாக நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 9ம் தேதி) தென் மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் உகாதி மற்றும் குடி பத்வா ஆகிய இரண்டு புத்தாண்டு விழாக்களை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் இந்த கோவிலுக்கு வந்ததால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, பைசாகி, விஷு, தமிழ் புத்தாண்டு, பிஹு, ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி போன்ற குறிப்பிடத்தக்க இந்து பண்டிகைகள் அடுத்த இரண்டு வாரங்களில் வரிசையாக வரவிருப்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், முன்பதிவு செயல்முறையை சீரமைக்கவும் கோவில் நிர்வாகம் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது குறித்து கோயில் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திர் திறக்கப்பட்டதில் இருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் பக்தர்கள் காட்டிய அன்பும் பாசமும் பல இதயங்களைத் தொட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரியதாக இருந்தது” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், தினசரி கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் கணிசமாக உயரும் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே, இனி பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே தேர்ந்தெடுப்பதன் மூலம் காத்திருப்பு நேரத்தையும் குறைக்க முடியும். அத்துடன் செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இந்த ஆலயம் திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இங்கு செல்ல திட்டமிடுபவர்கள் தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளவும், மேலும் இந்து கற்கோவிலைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வதற்கும் https://www.mandir.ae/visit என்ற லிங்கைப் பார்வையிட கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel