ADVERTISEMENT

அமீரகத்தின் மிக பிரபலமான அபுதாபி பிக் டிக்கெட் டிரா நிறுத்தம்.. அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்..!!

Published: 1 Apr 2024, 12:28 PM |
Updated: 1 Apr 2024, 12:39 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட காலமாக நடத்தப்பட்டு வரும் மிக பிரபலமான அபுதாபி பிக் டிக்கெட் டிரா அமீரகத்தின் ஒழுங்குமுறை கேமிங் தேவைகளுக்கு இணங்க இன்று (ஏப்ரல் 1) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒவ்வொரு மாதமும் 3 ஆம் தேதி அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்டு வரும் இந்த பிக் டிக்கெட் டிரா கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 246,297,071 திர்ஹம் பரிசுகளை பிக் டிக்கெட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமீரகத்தின் மூன்றாவது பெரிய ரேஃபிள் டிரா ஆபரேட்டரான பிக் டிக்கெட், தற்போது அதன் செயல்பாடுகளை நிறுத்துவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், வருகின்ற ஏப்ரல் 3 புதன்கிழமை அன்று சீரிஸ் 262 க்கான திட்டமிடப்பட்ட நேரடி டிரா நடைபெறும் என்றும், இந்த டிராவின் போது முதல் வெற்றியாளருக்கு வழங்கப்படும் கிராண்ட் பரிசுத் தொகையான 10 மில்லியன் திர்ஹம்ஸ் உட்பட அனைத்து பரிசுகளும் வழங்கப்படும் என்றும் பிக் டிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்போது மே 3 அன்று நடைபெறவிருந்த மஸராட்டி கிப்லி (Maserati Ghibli) மற்றும் ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) போன்ற டிரீம் கார் டிராக்களும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல், துபாயை தளமாகக் கொண்ட மஹ்சூஸ் மற்றும் எமிரேட்ஸ் டிரா அமீரகத்தில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்திருக்கின்றன. அத்துடன் இந்த இரு டிராக்களும் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஆண்டான 2023இல் சமூகப் பொறுப்பான கேமிங் சூழலை உருவாக்கும் நோக்கில் நிறுவப்பட்ட ஒரு கூட்டாட்சி அமைப்பான UAE கேமிங் ஒழுங்குமுறை ஆணையத்தின் (GCGRA) உத்தரவுகளுக்கு இணங்க இந்த இடைநிறுத்தம் இருப்பதாக இந்த இரு நிர்வாகங்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், டிராவின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், உரிமத்தை நிர்வகித்தல் மற்றும் வணிக கேமிங்கின் பொருளாதார திறனை பொறுப்புடன் திறத்தல் ஆகியவற்றிற்கும் இந்த GCGRA பொறுப்பாகும்.

இந்த செயல்பாடு நிறுத்தத்தின் போது தனது வாடிக்கையாளர்களை நோக்கி பிக் டிக்கெட் நிர்வாகம் கூறியிருப்பதாவது: “இந்த இடைநிறுத்தத்தின் போது, ​​உங்களின் ஆதரவிற்கு எங்கள் மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். (நாங்கள்) எங்களின் பரிசுகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதில் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், பிக் டிக்கெட் தனது செல்பாடுகளை விரைவாக துவங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும், ஒழுங்குமுறை நெறிமுறைகளை கடைபிடிப்பதால், அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் சரியான நேரத்தில் அப்டேட்கள் வெளியிடப்படும் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.

 

பரிசுகள் பாதுகாக்கப்படும்:

போட்டியாளர்கள் முந்தைய டிராவில் வென்ற அனைத்து பரிசுகளும் பாதுகாப்பாக பாதுகாக்கப்பட்டு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் பிக் டிக்கெட் உறுதியளித்துள்ளது. இந்த இடைநிறுத்தத்தின் போது வாடிக்கையாளர்கள் தங்கள் அக்கவுண்டினை அணுக முடியாது என்றாலும், செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் போது அவர்கள் தங்கள் பிக் டிக்கெட் அக்கவுண்டிற்கான முழு அணுகலைத் தக்க வைத்துக் கொள்வார்கள் என்றும் விளக்கமளித்துள்ளது.

அத்துடன் பிக் டிக்கெட் எப்போது மீண்டும் செயல்படும் என்பது தொடர்பான விவரங்களை டிரா ஆபரேட்டர் வெளியிடவில்லை. இருந்தாலும் கூடுதல் தகவல்கள் அல்லது உதவிகளுக்கு, பிக் டிக்கெட் வாடிக்கையாளர் ஆதரவை 971022019244 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது help@bigticket.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel