அமீரக செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் அமீரக விமான நிறுவனங்கள்: துபாய் ஏர்போர்ட் பற்றிய சமீபத்திய அப்டேட்கள்….

இரண்டு நாட்கள் நீடித்த மோசமான வானிலை அமீரகத்தை உலுக்கிய நிலையில், நாட்டின் உள்ளூர் விமான நிறுவனங்களும், சில வெளிநாட்டு விமான நிறுவனங்களும் அமீரகத்திலிருந்து புறப்படும் மற்றும் உள்வரும் விமானங்களின் அட்டவணைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தன.

இதற்கு முன், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சமீபத்திய மோசமான வானிலையிலிருந்து செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவாக ஏப்ரல் 19 அன்று நள்ளிரவு வரை துபாய் வழியாக டிரான்சிட்டில் பயணிக்கும் தனது நெட்வொர்க்கில் உள்ள அனைத்து பயணகளுக்கும் செக்-இன் செய்வதை நிறுத்துவதாக அறிவித்தது.

மேலும், ஏர் இந்தியா விமான நிறுவனமும் துபாய் மற்றும் அங்கிருந்து செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. இதேபோல், இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோவின் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

இது குறித்து இண்டிகோ X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விமான நிலைய கட்டுப்பாடுகள் மற்றும் மோசமான வானிலையால் ஏற்படும் செயல்பாட்டு சவால்கள் காரணமாக துபாய் செல்லும்/இருந்து செல்லும் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், உங்கள் விமான நிலையைக் கண்காணிக்கவும்”என்று பயணிகளை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், துபாய் செல்லும் இந்திய பயணிகளை அத்தியாவசியமற்ற பயணங்களை மாற்றியமைக்குமாறு வலியுறுத்தியிருந்தது.

அத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை, கனமழையால் ஏற்பட்ட செயல்பாட்டு சவால்கள் காரணமாக, DXB விமான நிலையத்திற்கு உள்வரும் விமானங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக  மட்டுப்படுத்துவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 20) எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் CEO டிம் கிளார்க், வானிலை தெளிவானதைத் தொடர்ந்து விமான அட்டவணைகள் மீண்டும் இயல்புக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து கிளார்க் கூறியிருப்பதாவது: “விமான நிலைய டிரான்சிட் ஏரியாவில் முன்பு சிக்கித் தவித்த பயணிகள் மீண்டும் முன்பதிவு செய்யப்பட்டு அவர்கள் பயணிக்க வேண்டிய இடங்களுக்குச் சென்றுள்ளனர். பயணிகளின் சுமார் 30,000 லக்கேஜ்களை வரிசைப்படுத்தவும் மற்றும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கவும் ஒரு பணிக்குழுவை நாங்கள் ஒன்றிணைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்தை போன்றே Flydubai விமான நிறுவனமும் இன்று DXBயின் டெர்மினல் 2 மற்றும் 3லிருந்து அதன் முழு விமான அட்டவணையை இயக்கத் திரும்பியுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், DXB, புறப்படும் அனைத்து பயணிகளையும் தங்கள் விமானத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்து செக்-இன் செய்ய போதுமான நேரத்தை அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் டெர்மினலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க விமான நிலையத்திற்கு சீக்கிரம் வர வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரமடைந்த வானிலை காரணமாக, DXBயிலிருந்து சுமார் 31 விமானங்கள் அருகிலுள்ள அல் மக்தூம் விமான நிலையத்திற்கு (Dubai World Central) திருப்பிவிடப்பட்டதாக துபாய் ஏர்போர்ட்ஸ் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!