ADVERTISEMENT

அமீரகத்தில் கனமழை காரணமாக 17 விமானங்கள் ரத்து..!! பயணிகளுக்கான அறிவுறுத்தல்களை வெளியிட்ட விமான நிறுவனங்கள்..!!

Published: 16 Apr 2024, 5:52 PM |
Updated: 16 Apr 2024, 5:52 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் இன்றைய தினம் (செவ்வாய்கிழமை) மோசமான வானிலை தீவிரமடைந்து வருவதால், சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, விமானப் போக்குவரத்தும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, திங்கள்கிழமை முதல் துபாயில் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், இன்று துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) விமானங்கள் ரத்து, தாமதங்கள் என இயல்பான விமானச் செயல்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

நிலையற்ற வானிலையால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விமான நிலையம் வரக்கூடிய 8 விமானங்கள் மற்றும் விமான நிலையத்தில் இருந்து புறப்படக்கூடிய 9 விமானங்கள் என மொத்தம் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில தாமதமான விமானங்கள் இறுதியாக நண்பகலில் தரையிறங்கியதாகவும் துபாய் விமான நிலையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், மூன்று விமானங்கள் மற்ற அண்டை விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும், துபாய் ஏர்போர்ட்ஸின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்சமயம், விமான நிலையத்தின் பயணிகள் அனுபவிக்கும் எந்த சிரமத்தையும் குறைக்க துபாய் ஏர்போர்ட்ஸ் அதன் சேவை பங்காளிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் தீவிரமாக ஒத்துழைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இத்தகைய சூழலில், பயணிகள் தங்கள் விமானத்தின் நிலை குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற தங்கள் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்குமாறும், விமான நிலையத்திற்கு கூடுதல் பயண நேரத்தை ஒதுக்குமாறும் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க துபாய் மெட்ரோவை பயன்படுத்துமாறும் துபாய் ஏர்போர்ட்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்றைய தினம் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், ஃபெடரல் மற்றும் எமிரேட் மட்டங்களில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில், ஃப்ளைதுபாய் விமான நிறுவனம் துபாயில் இருந்து விமானம் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரம் 75 நிமிடங்களுக்கு முன்பு ஆன்லைனில் சரிபார்க்குமாறு அதன் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் விமானம் புறப்படும் நேரத்திற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு செக்-இன் முடிவடைவதால், பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது தொடர்பாக Flydubai நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “டெர்மினல் 2 இல் உள்ள எங்களின் புதிய சுய-சேவை கியோஸ்க்களில் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் பயணிகள் விமான நிலையத்தில் நேரத்தைச் சேமிக்க முடியும், அங்கு அவர்கள் தங்கள் பேக்கேஜ் டேக்கை அச்சிட்டு ஆன்லைனில் செக்-இன் செய்து முடிக்கலாம், பின்னர் பிரத்யேக பேக் டிராப் டெஸ்க்கிற்கு நேரடியாகச் செல்லலாம்” என்று கூறியுள்ளார்.

இரண்டு நாட்களாக நீடிக்கும் மோசமான வானிலை விமான சேவையை பாதித்துள்ளதாகவும், சில விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும் கூறிய அவர், பயணிகளின் பயண அட்டவணையில் ஏதேனும் இடையூறு ஏற்படுவதைக் குறைக்க விமான நிறுவனம் கடுமையாக உழைத்து வருவதாகவும், வானிலை நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அபுதாபியைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் Etihad Airways நிறுவனமும் தங்கள் விமானம் புறப்பாடு பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு Etihad இணையதளத்தை தவறாமல் பார்க்குமாறு அதன் பயணிகளை அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.