ADVERTISEMENT

அமீரகத்தில் கனமழையால் சாலைகளில் நிலச்சரிவு!! வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு வழிக்காட்டுதல்களை வழங்கிய காவல்துறை….

Published: 16 Apr 2024, 4:49 PM |
Updated: 16 Apr 2024, 4:49 PM |
Posted By: Menaka

அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பின் படி, திங்கள்கிழமை உருவான நிலையற்ற வானிலை இன்று நாடு முழுவதும் இரண்டு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்சமயம், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் அதிகளவிலான வெப்பச் சலன மேகங்கள் உருவாகுவதன் விளைவாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இடியுடன் கூடிய கனமழை, அதிபயங்கரமான மின்னல் தாக்குதல்கள் மற்றும் ஆலங்கட்டி மழையை அனுபவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சாலைகளில் வெள்ளப்பெருக்கு:

நேற்று முதல் அல் அய்னில் கடும் மழைப்பொழிவு பதிவாகி வருகின்ற நிலையில், பிராந்தியத்தின் தெற்கே அல் குவாவில் (Al Qua) சாலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு திடீரென பள்ளம் தோன்றியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக Storm_ae வெளியிட்ட வீடியோவில், நிலச்சரிவில் கார் அடித்துச் செல்லப்படுவதைக் காணலாம். மேலும், கனமழையால் பள்ளத்தாக்குகள் நிரம்பி பெரும்பாலான சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைவெள்ளம் அருவி போல காட்சியளிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

அல் அய்னைப் போலவே, ராஸ் அல் கைமாவில் உள்ள எமிரேட்ஸ் சாலையை நோக்கிச் செல்லும் சாலையின் ஒரு பகுதி நிலச்சரிவு காரணமாக இடிந்து விழுந்தது. உடனடியாக, அந்தப் பகுதியை சுற்றிவளைத்த RAK காவல்துறை, வாகன ஓட்டிகளை கவனம் செலுத்தி வேகத்தை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பெய்யும் கனமழையால் ஷார்ஜாவிலும்  பல தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. துபாயில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஆன்பாஸிவ் மெட்ரோ நிலையமானது தண்ணீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா உள்ளிட்ட எமிரேட்களில் கனமழை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு அத்தியாவசிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

  • சாலையில் தெளிவான பார்வைக்கு குறைந்த பீம் ஹெட்லைட்களைப் பயன்படுத்தவும்
  • சாலையில் தேங்கியுள்ள தண்ணீர் குட்டைகளை கடந்து சென்ற பிறகு பிரேக்குகள் சரியாக செயல்படுவதை உறுதி செய்யவும்
  • மழையின் போது பள்ளத்தாக்குகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்
  • கண்ணாடி மேற்பரப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்
  • வேகத்தைக் குறைத்து சாலை ஓரங்களில் இருந்து விலகி இருக்கவும்
  • மூடுபனி உருவாவதைத் தடுக்க வெளிப்புற காற்று சுழற்சி அம்சத்தைப் (external air circulation feature) பயன்படுத்தவும்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.