ADVERTISEMENT

75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மழைப்பொழிவை சந்தித்த அமீரகம்..!! ஒரே நாளில் அதிகபட்ச மழை பதிவு..!!

Published: 17 Apr 2024, 12:15 PM |
Updated: 17 Apr 2024, 12:29 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையானது மிக அதிகளவு பெய்ததாகவும் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இரண்டு நாட்களாக மழை கொட்டித் தீர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமீரகத்தில், 1949-ம் ஆண்டு மழைக்கான தரவு சேகரிப்பு தொடங்கியதிலிருந்து பதிவுசெய்யப்பட்ட மழைப்பொழிவை விஞ்சி அதிக மழைப்பொழிவை தற்பொழுது அமீரகம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, அல் அய்ன் பிராந்தியத்தில் உள்ள Khatm Al Shakla பகுதியில் 24 மணி நேரத்திற்குள் 254 மி.மீ. மழைப்பொழிவை வானிலை துறை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு மார்ச் 9, 2016 அன்று ஷுவைப் (Shuwaib) நிலையத்தில் ஒரே நாளில் 287.6 மிமீ பதிவானதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் அமீரகம் முழுவதும் பெய்த மழையை ஒப்பிடுகையில் கடந்த இரு நாட்களாக பெய்த மழையானது இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச மழை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த கனமழை ஒரு விதிவிலக்கான நிகழ்வு என்றும், மேலும் தொடர்ந்து அதிக அளவு மழை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் NCM தெரிவித்துள்ளது. ஏப்ரல் 16, செவ்வாய்கிழமை இரவு 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் பெய்த மழையானது, இதுவரை அமீரகத்தில் பதிவான மழைப்பொழிவை விட அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண்டு மழை சராசரி அளவை அதிகரிக்க பங்களிப்பதுடன் நாட்டின் நிலத்தடி நீர் இருப்புகளை வலுப்படுத்தும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக வெளியான வானிலை முன்னறிவிப்பின் படி, திங்கள்கிழமை ஆரம்பித்த கனமழை செவ்வாயன்று தீவிரமடைந்து அமீரகத்தைப் புரட்டிப்போட்டதுடன் அமீரக  குடியிருப்பாளர்களை பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கியுள்ளது. நேற்று இரண்டு அலைகளாக பெய்த கனமழையால் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

ADVERTISEMENT

தற்பொழுது வரை பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாமல் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதுடன் தரை மற்றும் விமான போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.