ADVERTISEMENT

துபாயில் இருந்து பிற எமிரேட்டுகளுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்.. மழை வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளால் போக்குவரத்தை திருப்பி விடும் RTA!!

Published: 17 Apr 2024, 2:31 PM |
Updated: 17 Apr 2024, 4:07 PM |
Posted By: Menaka

நாடு முழுவதும் இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையின் விளைவாக, துபாயின் பெரும்பாலான சாலைகளில் மழைவெள்ளம் குளம் போல் தேங்கியிருப்பதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒருபுறம், துபாயின் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம், மற்றொரு புறம் இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் நிறுத்தம் என பலத்த மழைக்குப் பிறகு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பல்வேறு போக்குவரத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக, கனமழையின் தாக்கத்தால் ஷேக் முகமது பின் சையத் சாலையில் இருந்து ஷார்ஜாவை நோக்கி செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக RTA காலையில் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இது தொடர்பாக RTA அதன் சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “ஷேக் முகமது பின் சையத் சாலையில் ஷார்ஜாவை நோக்கிச் செல்பவர்களுக்கு, எமிரேட்ஸ் சாலைக்கு செல்லும் துபாய்-அல் அய்ன் சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இதற்கிடையில், நிலையற்ற வானிலையால் எமிரேட்டில் பாதிக்கப்பட்டுள்ள சீரான போக்குவரத்தை மீட்டெடுக்க RTA குழுக்கள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மோசமான வானிலைக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை மாலை துபாய் – அபுதாபி, துபாய் – ஷார்ஜா மற்றும் துபாய் – அஜ்மான் இடையேயான இன்டர்சிட்டி பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் RTA அதன் X தள பதிவில் தெரிவித்துள்ளது.

இடைவிடாது இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை எமிரேட்டின் பல சாலைகளை வெள்ளத்தில் மூழ்கடித்தன் காரணமாக, RTA-வின் இந்த பேருந்து சேவை தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது. இருந்தபோதிலும் தற்பொழுது பல இடங்களில் மழையின் தாக்கம் குறைந்து வருவதால் சாலை போக்குவரத்தானது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.