துபாய்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!! சாலிக்கின் பெயர் மற்றும் லேபிளைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி..!! கவனத்துடன் இருக்க அதிகாரிகள் வலியுறுத்தல்….
துபாயின் டோல் கேட் ஆப்பரேட்டரான சாலிக் நிறுவனத்தின் பெயர் மற்றும் லேபிளை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யும் குளோன் இணையதளங்கள், போலி மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடக மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு வாடிக்கையாளர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், புதிய அப்டேட்களுக்கு சாலிக்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் நம்பகமான ஆதாரங்களை மட்டுமே நம்புமாறு குடியிருப்பாளர்களை சாலிக் வலியுறுத்தியுள்ளது. சமீபத்திய மாதங்களாகவே, சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் ஃபிஷிங் எனப்படும் மோசடி செய்திகள் பரவுவதை சாலிக் நிறுவனம் கவனித்து வருவதாகவும் இந்த மோசடி செய்திகளில் சில சாலிக் பங்குகளில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு நிலையான வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அதில் பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மேலும் சில செய்திகள், சாலிக் அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்ய அல்லது சாலிக்கை வாங்குவதற்கு போலி இணைப்புகள் அல்லது வலைத்தளங்களை வழங்குகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சாலிக் நிறுவனத்தின் CEO இப்ராஹிம் சுல்தான் அல் ஹடாத் அவர்கள் கூறுகையில், வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை போலியான கணக்குகளுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்றும், இவை மக்களின் தனிப்பட்ட தரவு மற்றும் பணத்தைத் திருட நாட்டிற்கு வெளியில் இருந்து செயல்படும் மோசடி செய்பவர்களால் நடத்தப்படும் மோசடித் திட்டங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசுகையில், “சாலிக் பங்குகளை வாங்க ஆர்வமுள்ள நபர்கள் தரகர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ சேனல்களுடன் தொடர்பு கொள்ளலாம், அதே போல் துபாய் ஃபைனான்சியல் மார்க்கெட் (DFM) இணையதளத்தைப் பார்வையிடலாம்” என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இத்தகைய மோசடி செய்திகளுக்கு வாடிக்கையாளர்கள் இரையாகாமல் பாதுகாக்கவும், மோசடியை தடுக்கவும், சாலிக் நிறுவனத்தின் தரப்பில் பின்வரும் எச்சரிக்கை நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது:
http:// என்பதற்குப் பதிலாக https:// என்று தொடங்கும் URLகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான லிங்க்கை உறுதிசெய்யுமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்கிடமான லிங்க்குகள் மற்றும் பாப்-அப் விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறும், இது வாடிக்கையாளர்களை வேறு சில தீங்கிழைக்கும் வலைத்தளங்களுக்குத் திருப்பிவிடலாம் மற்றும் ஒருவரின் தனிப்பட்ட தகவலைத் திருடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, மிக சமீபத்திய செக்யூரிட்டி அப்கிரேடுகளுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தகவல் தொடர்பு சேனல்களை சரிபார்க்குமாறும், அத்துடன் சாலிக்கிடமிருந்து வந்ததாகக் கூறும் ஆன்லைனில் பெறப்பட்ட செய்திகளின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்குமாறும் வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel