UAE: இயல்பு நிலை திரும்பும் வரையிலும் பார்க்கிங் கட்டணம் இல்லை.. அறிவிப்பை வெளியிட்ட ஷார்ஜா..!!
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழைப்பொழிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து எமிரேட்களும் இயற்கைப் பேரழிவின் தாக்கத்திலிருந்து முழுமையாக மீட்சியடைய தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டியானது குறிப்பிட்ட பகுதிகளில் குடியிருப்பாளர்கள் வெள்ள பாதிப்பில் இருந்து முழுமையாக மீளும் வரை அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக புதிய அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஷார்ஜா முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷார்ஜாவில் கனமழை தாக்கிய பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை வாகன நிறுத்த அபராதம் விதிக்கப்படாது என்றும், தீவிர வானிலையின் போது வாகன நிறுத்துமிட விதிமீறல்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலையின் போது, பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அனைத்து அபராதங்களையும் ரத்து செய்வதாக ஷார்ஜா காவல்துறை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த பார்க்கிங் அபராதத் தள்ளுபடிகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமழை ஏற்படுத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், ஷார்ஜா நகர முனிசிபாலிட்டி, பார்க்கிங் அபராதத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
அபராதத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள பார்க்கிங் மீறல்கள்:
- பார்க்கிங் கட்டணம் செலுத்தாதது
- ஒன்றுக்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்களை பயன்படுத்துதல்
- ரிசர்வ் செய்த இடங்களில் பார்க்கிங் செய்தல்
ஆகவே, தீவிர காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, பொது பார்க்கிங் மீறல்கள் கிடையாது மற்றும் அபராதம் விதிக்கப்படாது என்று முனிசிபாலிட்டி குறிப்பிட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel