அபுதாபியில் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் கப்கள், மூடிகள், தட்டுகள், பானக் கொள்கலன்கள் மற்றும் உணவுப் பாத்திரங்கள் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஸ்டைரோஃபோம் தயாரிப்புகள் மீதான தடை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அபுதாபியில் உள்ள பெரும்பாலான கடைகள் காகித கோப்பைகள் அல்லது தட்டுகள் மற்றும் அலுமினிய கொள்கலன்கள் என அதன் மாற்று தயாரிப்புகளுக்கு மாறி வருகின்றன.
பொதுவாக, ஸ்டைரோஃபோம் பாத்திரங்களை விட காகித கோப்பைகள் மற்றும் அலுமினிய கொள்கலன்கள் உட்பட அதன் அனைத்து மாற்று பொருட்களும் விலை உயர்ந்தவை என்பதால், பெரும்பாலான கடைகளில் உணவுப் பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு உணவக உரிமையாளர்கள் அபுதாபியில் விரைவில் அமலுக்கு வரவிருக்கும் ஸ்டைரோஃபோம் தயாரிப்புகள் மீதான தடை குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
இது குறித்து அபுதாபியின் ஜாஹியா பகுதியில் டல்லாஸ் என்ற உணவகத்தை 1984 ஆம் ஆண்டு முதல் நடத்தி வரும் முகமது அன்வர் என்ற உணவக உரிமையாளர் பேசிய போது, அந்த உணவகத்தைத் தொடங்கியதில் இருந்து ஸ்டைரோஃபோம் கோப்பைகள் அவரது உணவகத்தின் ஒரு பகுதியாகவும், பார்சலாகவும் இருந்து வருவதாகவும், இந்த கோப்பைகளில் சூடான பொருட்களை ஊற்றினால் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்ததிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக, தனது கடையில் இருந்து படிப்படியாக இந்தக் கோப்பைகளை அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், “ஸ்டைரோஃபோம் கோப்பைகளை மாற்றுவது தனது உணவகத்திற்கு பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தியதாக அன்வர் ஒப்புக் கொண்டார். அதாவது, ஸ்டைரோஃபோம் தயாரிப்புகள் மிக மலிவான விலையில் கிடைக்கும், ஆனால் அதற்கு பதிலாக பயன்படுத்தப்படும் மாற்று பொருட்கள் விலை அதிகமாக இருக்கிறது” என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசிய அன்வர், “நாங்கள் ஏற்கனவே அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம், கடந்த சில ஆண்டுகளாக இதைப் பிரதிபலிக்கும் வகையில் எங்கள் விலைகளை மாற்றியமைத்துள்ளோம், ஆனால் இன்னும் ஸ்டைரோஃபோமைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் சில சிறிய கஃபேக்கள், காகிதக் கோப்பைகள் போன்றவற்றிற்கு மாறினால் அவற்றின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார்.
அபுதாபியில் இயங்கி வரும் நோட்புக் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார் என்பவர், அபுதாபியின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது பற்றி கூறிய சதீஷ், “நாங்கள் காகிதக் கோப்பைகள் மற்றும் பிற மாற்றுகளைப் பயன்படுத்தத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும், புதிய தலைமுறையினர் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடிப் பாத்திரங்களை விரும்புகிறார்கள், இதில் நிறைய சவால்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் நாம் அவற்றைக் கழுவ வேண்டும், பராமரிக்க வேண்டும் மற்றும் அவை சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழலுக்கு இது முக்கியமானது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும், செலவு மட்டுமே எங்களைத் தடுத்து நிறுத்துகிறது. எங்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் செலவை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இ-துனியாவு என்ற மற்றொரு உணவகத்தின் நிர்வாகப் பங்குதாரர் ரனீஸ் நஜ்மி என்பவர் கூறுகையில், தற்போது பலர் அலுமினியம் மற்றும் காகிதப் பெட்டிகளை நோக்கி நகரத் தேர்வு செய்வதாகவும், ஃபாஸ்ட்-ஃபுட் கடைகள் அவற்றின் பிராண்ட் பெயர்களுடன் முத்திரை குத்தி காகித பொட்டலங்களைப் பயன்படுத்துவதைப் போல பல மாற்று வழிகள் உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கிடையில், தனது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் கண்ணாடி கோப்பைகளை விரும்புவதாகவும், குறிப்பாக தேநீருக்காக வலியுறுத்துவதாகவும் தெரிவித்த ரனீஸ், “எனவே, நாங்கள் எங்களால் முடிந்த வரை ஸ்டைரோஃபோம் தயாரிப்புகளில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel