அமீரக செய்திகள்

அபுதாபியில் உள்ள IIT-டெல்லி வளாகத்தில் மாணவர் சேர்க்கை திறப்பு..!! நுழைவுத் தேர்வுக்கான தகுதி, வரம்புகள் வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT)-டெல்லி கல்வி நிறுவனத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இப்போது திறக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. IIT-டெல்லி என்பது இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் ஒரு முதன்மையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் ஆகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் இருந்து பல முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச பள்ளிகளும் அமீரகத்தில் இயங்கி வருகின்றன. அந்த வரிசையில், இப்போது IIT-டெல்லி கல்வி நிறுவனமும் இணைந்துள்ளது.

UAE தலைநகரில் IIT-டெல்லி வளாகத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்த போது இந்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் அபுதாபியின் கல்வி மற்றும் அறிவுத் துறை (ADEK) இடையே கையெழுத்தானது.

தற்பொழுது, அபுதாபியில் உள்ள IIT-டெல்லி வளாகம் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக்கான மாணவர்ச் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. பி.டெக். கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மற்றும் பி.டெக். ஆற்றல் பொறியியல் போன்ற இரண்டு துறைகளில் மொத்தம் 60 இருக்கைகள் இருப்பதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் முதல் தொகுதி மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள இவ்வளாகத்தில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என்பது பற்றிய செயல்முறைகளை பின்வருமாறு பார்க்கலாம்:

சேர்க்கை செயல்முறை

மேற்கூறப்பட்ட இரண்டு கல்வித் திட்டங்களுக்கான மாணவர் சேர்க்கையானது ஒருங்கிணைந்த சேர்க்கை நுழைவுத் தேர்வு (CAET) 2024 மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE-Advanced) 2024 போன்ற  இரண்டு தேர்வுகள் மூலம் நடைபெறும். JEE (மேம்பட்ட) இன் தகுதி அளவுகோல்கள் மற்றும் பிற விவரங்கள்/ தேவைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்:

https: //jeeadv.ac.in/index.html.

CAETக்கான தகுதி:

அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள், எமிராட்டிகள் மற்றும் சர்வதேச மாணவர்கள் பின்வரும் 5 தகுதி அளவுகோல்களின் அடிப்படையில் CAET க்கு தகுதி பெறலாம்:

 1. விண்ணப்பதாரர்கள் வகுப்பு/கிரேடு XII (அல்லது அதற்கு சமமான) போர்டு தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மொத்த மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது அந்தந்த வகுப்பு/கிரேடு XII (அல்லது அதற்கு சமமான) போர்டு தேர்வில் முதல் 20 சதவீதத்தில் இருக்க வேண்டும்.
 2. விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 1, 1999 அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். UAE தேசியக் கொள்கையின்படி இரண்டு வருட வயது தளர்வு பொருந்தும்.
 3. மாணவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக இரண்டு முறை தேர்வுக்கு முயற்சி செய்யலாம்.
 4. ஒரு விண்ணப்பதாரர் நடப்பு ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டில் முதல் முறையாக வகுப்பு/கிரேடு 12 (அல்லது அதற்கு சமமான) தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டும்.
 5. விண்ணப்பதாரர் திட்டத்தில் தொடர்ந்தாரா அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு IIT இருக்கையை காலி செய்தாலும், எந்த ஒரு IITயிலும் இதற்கு முன் அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது.

CAET தேர்வுக்கான அளவுகோல்:

அமீரகத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் EmSAT அல்லது SAT இல் சரியான மதிப்பெண்ணைப் பெறுவதன் மூலம், CAET 2024 க்கு தகுதி பெறலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

குறைந்தபட்சம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அமீரகக் குடியிருப்பாளர்களின் குழந்தைகளான இந்திய குடிமக்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள்.

UAE மற்றும் இந்திய பிரஜைகளைத் தவிர, மார்ச் 4, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் (PIO) மற்றும் வெளிநாட்டுக் குடியுரிமை (OCI) அட்டையைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் சர்வதேச மாணவர்களாகக் கருதப்படுவார்கள்.

மேலும் இயற்பியல், வேதியியல், கணிதம், ஒரு மொழி மற்றும் இந்த நான்கு பாடங்களைத் தவிர மேலும் ஒரு பாடம் ஆகிய ஐந்து பாடங்களில் பெற்ற மொத்த மதிப்பெண்களும் சதவீதத்திற்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை கணக்கிடுவதற்கு பரிசீலிக்கப்படும். கடைசியாக, செல்லுபடியாகும் சான்றிதழுடன் ஒரு வருடம் கட்டாய இராணுவ சேவையில் பணியாற்றிய UAE பிரஜைகளுக்கு ஒரு வருட தளர்வு வழங்கப்படும்.

CAET தேர்வுக்கான முக்கியமான தேதிகள்

 • மே 16: ஆன்லைன் பதிவு ஆரம்பம்
 • ஜூன் 3: ஆன்லைன் பதிவு முடிவடைகிறது
 • ஜூன் 14: அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்யலாம்
 • ஜூன் 23: நுழைவுத் தேர்வு
 • ஜூலை 7: முடிவு அறிவிப்பு
 • ஜூலை-ஆகஸ்ட்: இட ஒதுக்கீடு செயல்முறை

மேற்கூறப்பட்டுள்ள தகவல் தவிர, தகுதித் தேர்வுகள், மையங்கள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, https://abudhabi.iitd.ac.in ஐப் பார்வையிடவும் அல்லது [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!