ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் முடி உதிர்வு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இது தினசரி வாழ்வில் பலரும் எதிர்கொள்ளும் சாதாரண பிரச்சினையாகத் தெரிந்தாலும், தினமும் 75 மயிரிழைகள் உதிர்வது ஆரம்பகால முடி உதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, ஒரு நபர் தினமும் 50 முதல் 75 மயிரிழைகளை இழக்கிறார் என்றால் அது இயல்பானது என்றும், ஆனால் அதுவே 75 முதல் 100 மயிரிழைகள் ஒரு நாளைக்கு உதிரும் போது, அது முடி உதிர்தலின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் அல்லது உடலில் உள்ள சிக்கலைக் குறிக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலும் தலைமுடியை சீராக்க சீப்பு பயன்படுத்தும் போது அல்லது குளித்தல் போன்ற செயல்களின் போது பொதுவாக முடி உதிர்வின் அதிகரிப்பை அடிக்கடி காணலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கிட்டத்தட்ட 66 சதவீத ஆண்கள் முடி உதிர்தலால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
அதாவது, மூன்று ஆண்களில் இருவர் முடி உதிர்தல் பிரச்சினையை அமீரகத்தில் எதிர்கொள்வதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் பெரும்பாலும் 30 வயதிற்குட்பட்டவர்கள் என்பது ஆபத்தான பகுதி என்று தோல் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல், பெண்களில் முடி உதிர்தல் பிரச்சனைகள் அவர்கள் பருவமடையும் போது தொடங்கி, காலப்போக்கில் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, தலை முடியானது வளர்ச்சி, ஓய்வு மற்றும் உதிர்தல் ஆகியவற்றின் இயற்கையான சுழற்சியில் இயங்குகிறது. இருப்பினும், உதிர்தல் கட்டம் துரிதப்படுத்தப்படும் போது, அது தலையில் குறிப்பிடத்தக்க மெல்லிய மற்றும் வழுக்கை புள்ளிகளுக்கு வழிவகுப்பதால் பெரும்பாலானவர்களுக்கு இது கவலை அளிக்கும் செயலாக மாறிவிடுகிறது.
முடி உதிர்தலுக்கான காரணங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெவ்வேறு வயதினரிடையே முடி உதிர்தல் பிரச்சினை வேறுபடுகிறது. அமீரகத்தில் உள்ள குழந்தைகளின் முடி உதிர்தலுக்கு மிகவும் பொதுவான காரணம் சில நோய்த்தொற்றுகள் மற்றும் வைட்டமின் குறைபாடுகள் மற்றும் அலோபீசியா அரேட்டா போன்ற தன்னுடல் தாக்க நிலைகள் ஆகியவை அடங்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மாறாக, பெரியவர்கள் என்று வரும்போது, மன அழுத்தம், மரபியல் (ஆன்ட்ரோஜெனிக் அலோபீசியா எனப்படுகிறது), தைராய்டு கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற உள் மருத்துவ பிரச்சினைகள், வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் சமீபத்திய நோய்களால் முடி உதிர்வை அனுபவிக்கிறார்கள் என்று மருத்துவர்கள் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பற்றி விளக்கமளித்துள்ளனர்.
சிகிச்சை விருப்பங்கள்:
முடி உதிர்தலுக்கான சிகிச்சை விருப்பங்கள் பெரும்பாலும் அடிப்படை காரணத்தைப் பொறுத்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது, ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டால், உணவு மாற்றங்கள் அல்லது சத்து மாத்திரைகள் மூலம் குறைபாட்டை சரிசெய்வது முதன்மை சிகிச்சையாகும். பொதுவான குறைபாடுகளில் இரும்பு, வைட்டமின் டி மற்றும் பயோட்டின் ஆகியவை அடங்கும்.
இதுபோலவே, மரபணு முடி உதிர்தல் பிரச்சினைகளுக்கு மினாக்ஸிடில், ஃபைனாஸ்டரைடு, ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் முடி மாற்று சிகிச்சைகள் ஆகியவை இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆயினும், இது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதேபோன்று, மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, நடைபயிற்சி அல்லது யோகா போன்ற மிதமான உடற்பயிற்சி பாதிக்கப்பட்டவரின் உணர்வை மேம்படுத்துவதாகவும், மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது, இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. இது தவிர, ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின் போன்ற நல்ல வேதிப்பொருட்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்வை கட்டுப்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel