ADVERTISEMENT

துபாய்: காதலியை கொன்று சூட்கேஸில் பதுக்கிய ஆசிய இளைஞர்.. கொலையை மறைத்ததால் நண்பர்களுக்கும் தண்டனை..!!

Published: 2 May 2024, 7:31 PM |
Updated: 2 May 2024, 7:31 PM |
Posted By: Menaka

துபாயில் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை சூட்கேஸில் மறைத்து வைத்த 26 வயதான ஆசிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி துபாய் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கீழ் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி மேல்முறையீடு செய்த நிலையில், தற்போது துபாய் மேல்முறையீட்டு நீதிமன்றமும் ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்து கடந்த ஏப்ரல் 29ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

நீதிமன்ற பதிவுகளின் படி, ஜனவரி 26, 2022 அன்று கொலை செய்யப்பட்ட பெண் இன்டர்நேஷனல் சிட்டியில் உள்ள அந்த இளைஞரின் வீட்டில் இருந்த போது, அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றிப்போகவே, அந்த ஆசிய இளைஞர் ஆத்திரத்தில் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

கொலை செய்தவுடன் அப்பெண்ணின் உடலை அவரது கட்டிலின் அடியில் மறைத்து வைத்து விட்டு, அந்தப் பெண்ணின் மொபைல் போன் உட்பட அவரது மற்ற உடமைகளையும் ஒரு கழிவுநீர் குழாயில் போட்டு அப்புறப்படுத்தியுள்ளார். பின்னர் அடுத்த நாள் காலை ஜெபல் அலியில் ஒரு ஹோட்டல் அறையை முன்பதிவு செய்து தங்கியிருந்த அந்த இளைஞர், அவருடன் ஒன்றாக தங்கியிருக்கும் அறை நண்பர்கள் இரண்டு பேருக்கும் கொலை குறித்து SMS இல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தகவல் அறிந்ததும் பதறிப்போன அவரது நண்பர்கள் உடனடியாக அப்பெண்ணின் சடலத்தை அறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்று கொலை செய்த இளைஞரை வலியுறுத்தியுள்ளனர். அதையடுத்து, அந்த நபர் ஒரு பெரிய சூட்கேஸை வாங்கி, அதற்குள் பெண்ணின் சடலத்தை அடைத்து குப்பைத் தொட்டியின் அருகே விட்டுச் சென்றதாகவும் நீதிமன்ற பதிவுகள் கூறுகின்றன.

மேலும், இந்த கொலை வழக்கு குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் விவரித்த போது, ஜனவரி 29, 2022 அன்று அந்த இடத்தில் சூட்கேஸ் இருப்பதைக் கண்டுபிடித்த கட்டிடத்தின் செக்யூரிட்டி, உடனடியாக காவல்துறையின் செயல்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, “சூட்கேஸைத் திறக்க முயன்றபோது அதில் இருந்து மனித கால் சிக்கியது” என்று புகாரளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

புகாரின் அடிப்படையில், உடனடியாக விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள், அதேநாளில் குற்றவாளியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணை நடன கிளப்பில் சந்தித்து காதலித்ததாகவும், அவர் அடிக்கடி தனது அறைக்கு வந்து சென்றதாகவும் தெரிவித்த அந்த இளைஞர், தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளி திடீரென பல்டி அடித்து அவர் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார், இருப்பினும் அவர் கொலை செய்தது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அவருக்கு மட்டுமின்றி, இந்த குற்றத்தை தெரிந்துகொண்ட பின்பும் இதுபற்றி உடனடியாக காவல்துறைக்கு புகாரளிக்கத் தவறிய குற்றத்திற்காக அவரது அறை நண்பர்கள் இருவருக்கும் தலா மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அத்துடன், சிறை தண்டனை முடிந்த பின்னர் அவர்களை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel