ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு, தற்போதைய நிறுவனத்திற்கு போட்டியான நிறுவனம் ஒன்றில் சிறந்த ஊதியத்துடன் வேலை கிடைக்கும் பட்சத்தில், தற்போதைய முதலாளி அந்த ஊழியரை தடை செய்யவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவோ முடியுமா?
இத்தகைய சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு ஊழியர் என்ன செய்ய வேண்டும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வேலைவாய்ப்புச் சட்டம் இது பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பற்றிய கூடுதல் விபரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அமீரகத்தின் வேலைவாய்ப்புச் சட்டத்தின் விதிகளும் அமைச்சரவைத் தீர்மானங்களும் பொருந்தும். அமீரகத்தில் நிறுவனத்துடனான வேலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட அறிவிப்புக் காலத்தை வழங்குவதன் மூலம், ஒரு பணியாளர், முதலாளியுடனான வேலை உறவை முடித்துக் கொள்ளலாம் என்று சட்டம் கூறுகிறது.
மேலும், ஊழியரின் ராஜினாமாவை ஏற்காதது துன்புறுத்தல் என்று கருதப்படுகிறது, எனவே முதலாளிக்கு எதிராக ஒரு ஊழியர் மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தில் (MoHRE) புகார் செய்யலாம் மற்றும் அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ஊழியர் எந்த அறிவிப்புக் காலமும் வழங்காமல் வேலையை விட்டு வெளியேறலாம் என்று அமீரகத்தின் வேலைவாய்ப்புச் சட்டத்தின் 45 (2) வது பிரிவு கூறுகிறது.
அதுமட்டுமின்றி, முதலாளி அல்லது அவரது சட்டப் பிரதிநிதியால் தாக்குதல், வன்முறை அல்லது துன்புறுத்தல் போன்றவற்றை ஊழியர் எதிர்கொள்ளும் பட்சத்தில், அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சகத்திடம் ஐந்து வேலை நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும் மற்றும் அவர் அறிவிப்பு இல்லாமல் வேலையை விட்டு வெளியேறவும் சேவையின் முடிவில் அவரது அனைத்து உரிமைகளையும் கோரவும் முடியும்.
அதேபோன்று, வேலைவாய்ப்புச் சட்டத்தின் 13(2) பிரிவின்படி, ஒரு ஊழியரின் அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பறிமுதல் செய்யவோ அல்லது வேலையை முடித்தவுடன் போட்டி நிறுவனத்தில் சேருவதை தடுக்கும் விதமாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தவோ முதலாளி கூடாது.
அத்துடன் ஒரு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, போட்டியாளருடன் சேருவதன் மூலம் முந்தைய முதலாளிக்கு எதிராக விதிகளை மீறுவதாகக் கூறப்பட்டால், அதை நிரூபிப்பது முதலாளியின் பொறுப்பாகும். போட்டியின்மை, நிதி அல்லது அதன் முந்தைய ஊழியரால் முதலாளிக்கு ஏற்பட்ட ஏதேனும் சேதம் போன்றவற்றை அதிகார வரம்பைக் கொண்ட நீதிமன்றத்தின் முன் நிரூபிக்க வேண்டும்.
இது 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண்.1 இன் பிரிவு 12 (1) & (2) இன் படி, 2021 ஆம் ஆண்டின் 33 ஆம் எண் ஃபெடரல் ஆணைச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வேலைவாய்ப்பு உறவுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு இணங்க உள்ளது.
அதேபோல், UAE வேலைவாய்ப்புச் சட்டத்தின் 53 வது பிரிவின்படி, பணிநீக்கம் செய்யப்பட்டதிலிருந்து 14 நாட்களுக்குள் தனது ஊழியருக்கு சேவையின் இறுதிப் பலன்களை வழங்குவது ஒரு முதலாளியின் பொறுப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, மேற்கூறிய சட்ட விதிகளின் அடிப்படையில், உங்கள் முதலாளி உங்கள் ராஜினாமாவை ஏற்க மறுக்கக்கூடாது. அதேவேளை, உங்கள் முதலாளி உங்களை நாட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தவும் முடியாது. அதுமட்டுமல்லாமல் சரியான காரணங்கள் இல்லாமல் வேலைத் தடையை விதிக்க முடியாது. மேலே குறிப்பிட்டுள்ளபடி உங்கள் முதலாளி உங்கள் உரிமைகளை மீறும் பட்சத்தில், நீங்கள் MoHREயிடம் புகாரளிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel