ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய முன்தினம் (மே 12) கோடைகாலத்தைக் குறிக்கும் ‘அல் ஷுர்தான்’ எனப்படும் விண்மீன் வானில் தோன்றியதைத் தொடர்ந்து, நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகத் தொடங்கியுள்ளது.
நாட்டில் தற்போது வெப்பநிலை உச்சத்தை நோக்கி அதிகரித்து வருகின்ற நிலையில், குடியிருப்பாளர்கள் குறிப்பாக கடற்கரைக்கு செல்பவர்கள் ‘அல் சயுரா’ அல்லது ‘டிராயிங் கரண்ட்’ எனப்படும் ஆபத்தான நீரோட்டங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமீரக அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் (Emirates Astronomical Society) தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வான் கூறுகையில், நாட்டில் 40°Cக்கு மேல் உயரும் வெப்பநிலை மற்றும் பகலில் 30 சதவீதத்திற்கும் குறைவாக ஈரப்பதம் குறைவது இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட அல் ஷுர்தானின் தோற்றத்துடன் ஒத்துப்போவதாக விளக்கமளித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, அமீரகத்தின் வானியல் மையமும், மே 12 ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலையில் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து கோடைகாலத்தை குறிக்கும் விண்மீன் தொகுதியைப் பார்த்ததாக அறிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து, நாட்டில் உயரும் வெப்பநிலையால் கடலில் குளிப்பவர்களை கடலுக்குள் இழுக்கும் ‘அல் சயுரா’ எனப்படும் அபாயகரமான நீரோட்டங்கள் கடற்பரப்பில் உருவாகும் என்று கடற்கரைக்குச் செல்வோருக்கு அல் ஜார்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஜூலை நடுப்பகுதி வரை ‘Barah’ என்று குறிப்பிடப்படும் வறண்ட மற்றும் தூசி நிறைந்த வடமேற்குக் காற்று தீவிரமடைவதையும், அதைத் தொடர்ந்து ‘Sumoom’ எனப்படும் சூடான மற்றும் வறண்ட காற்று வலுவடைவதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel