துபாயில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட பனை வடிவ செயற்கைத் தீவான பாம் ஜெபல் அலி, துபாய் எமிரேட்டின் பிரதான சாலையான ஷேக் சையத் சாலையுடன் விரைவில் இணைக்கப்படவுள்ளதாக துபாய் ஹோல்டிங்கின் மாஸ்டர் டெவலப்பர் மற்றும் உறுப்பினரான நக்கீல் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுப் பயன்பாட்டிற்கான இந்த சாலை 6 கிமீ நீளத்தில் அமைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
துபாய் ரியல் எஸ்டேட் துறையின் மிகப்பெரிய டெவலப்பரான நக்கீல் நிறுவனம், சாலை கட்டமைப்பைத் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை சிவில் மற்றும் கடல்சார் ஒப்பந்ததாரரான DBB கான்ட்ராக்டிங் நிறுவனத்திற்கு நேற்று மே 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாம் ஜெபல் அலியுடன் இணைக்கும் பிரதான நிலப்பகுதியான துபாய் வாட்டர்ஃபிரண்டில் உள்ள அல் ஹெசா தெருவுக்கு (முன்னர் பழைய அபுதாபி சாலை) சாலை மற்றும் விளக்குகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தையும் நக்கீல் நிறுவனம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாம் ஜுமேராவை விட இரண்டு மடங்கு பெரிய ஜெபல் அலியில் எதிர்காலத்தில் தோராயமாக 35,000 குடும்பங்கள் வசிக்கும் என்று துபாய் ஹோல்டிங் ரியல் எஸ்டேட்டின் CEO காலித் அல் மாலிக் தெரிவித்துள்ளார். இந்த தீவு சுமார் தீவு 13.4 கிமீ நிலப்பரப்பில் 10.5 மில்லியன் சதுர மீட்டர் வளர்ச்சியுடன் இருப்பதாகவும், அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பங்காளிகளாக DBB கான்ட்ராக்டிங் மற்றும் கான்சாஹேப் சிவில் இன்ஜினியரிங் நிறுவனங்களை நியமிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் பாம் ஜெபல் அலி அடுத்த பெரிய விஷயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 16 பிரிவுகளைக் கொண்டுள்ளது, மொத்தம் 110 கிமீ கடற்கரை மற்றும் 91 கிமீ கடற்கரையை ஒட்டிய பகுதிகள் உள்ளது. கூடுதலாக, 80 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளையும், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு வசதிகளையும் இது கொண்டிருக்கும்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நக்கீல் அதன் முதல் வில்லாக்களை விற்பனைக்கு வைத்தபோது, சில மணிநேரங்களில் அவை விற்றுத் தீர்ந்தன. இந்த விற்பனையின் போது, சொத்து தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன், 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு விற்பனையில் 14.2 பில்லியன் திர்ஹம்ஸ் வருவாயை ஈட்டி, துபாயில் இந்த தீவு முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel